×

இருமாநில மக்களின் நல்லுறவு தொடரட்டும் பெரியாற்றில் புதிய அணை அவசியமில்லை: தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

கூடலூர்: பெரியாற்றில் புதிய அணை என்ற குரல் மீண்டும் கேரளாவில் கேட்க தொடங்கி உள்ளது. பெரியாறு புலிகள் சரணாலயத்தில் உள்ள தற்போதைய பெரியாறு அணையின் கீழ் பகுதியில், 366 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டுவதற்கான இடத்தை கேரளா கண்டறிந்து, ஆய்வு நடத்தப்பட்டு, புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை கேரளா தொடங்கியுள்ளது என கடந்த சில நாட்களுக்கு முன் கேரள ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஏற்கனவே கடந்த 1980, 2009, 2015, 2019ம் ஆண்டு என 4 முறை ஆய்வுகள் நடத்தியும், தோல்வியடைந்த திட்டத்தை மீண்டும் கையிலெடுத்து கேரள மக்களை குழப்ப பார்க்கிறது.
பெரியாற்றில் புதிய அணை தேவையா? என்ற கேள்விக்கு பெரியாறு அணையில் நடைபெற்றுள்ள ஆய்வுகளும், புதிய அணைபோல் செய்யப்பட்ட பணிகளும், இருமுறை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புமே புதிய அணை தேவையில்லை என பதில் சொல்லி உள்ளது.

பெரியாறு அணைக்கு முதல் எதிர்ப்பு
1976ல் முதல் முறையாக பெரியாறு அணை பலவீனம் அடைந்துள்ளது என கேரள அரசே மறைமுகமாக போராட்டத்தை தூண்டிவிட்டது. அப்போது அணையை பார்வையிட்ட மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள், கேரளாவின் நிர்பந்தத்தால் பெரியாறு அணையை ஒட்டி 300 மீட்டர் தூரத்திற்குள் புதிய அணை கட்ட திட்டமிட்டனர். அணையின் நீர்மட்டத்தையும் 136 அடியாக குறைத்தனர். ஆனால் அங்கு நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளிலும் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பதால் அத்திட்டத்தை கைவிட்டனர்.

தமிழக வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முதல் தீர்ப்பு
இதைத்தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 27.02.2006ல், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக தமிழக அரசு உயர்த்திக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை ஏற்காத கேரளஅரசு, கேரள அணைகள் பாதுகாப்பு சட்டதிருத்தத்தை சட்டமன்றத்தில் ஏக மனதாக நிறைவேற்றியது. மேலும், 2009ம் ஆண்டு டிச. 20ல் பெரியாற்றில் புதிய அணை என்ற கோரிக்கையோடு, தற்போதய அணைக்கு 350 மீட்டர் தொலைவில் 5 இடங்களில் ஆழ்துளை அமைத்து பாறைகளின் உறுதித்தன்மை சோதனை நடத்தியது. இதில் 3 இடங்களில் பாறைகள் உறுதியற்ற தன்மையில் இருந்ததும், நீர்கசிவு இருப்பதும் தெரிந்தது. அதனால் அணை கட்ட சாத்தியமில்லை என 2ம் முறையாக இத்திட்டம் கைவிடப்பட்டது.

தமிழகத்தின் 2வது வழக்கு
கேரள அணைகள் பாதுகாப்பு சட்டதிருத்தத்தை எதிர்த்து தமிழகம் மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றதால், கடந்த 2010ல், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர்குழுவை நியமித்து, பெரியாறு அணையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள தலைசிறந்த அணை வல்லுநர்குழு மூலம் 13 ஆய்வுகள் செய்யப்பட்டது. ஆய்வுகள் முடிவின்படி அணை பலமாக உள்ளதாக ஐவர்குழு உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கை வழங்கியது. அதன் பின்பே உச்சநீதிமன்றம் கடந்த 2014ல் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும் ஆய்வு
இந்நிலையில் கடந்த 2015 மே 1ல் 3ம் முறையாக கேரள அரசு தற்போதய அணைக்கு 350 முதல் 500 மீட்டர் தூரத்தில், பாறை உறுதித் தன்மை சோதனை செய்தது.அதில் அங்கு அணை கட்ட சாத்திய கூறுகள் இல்லை என மூன்றாம் முறையாக இத்திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து 2019ல் 4ம் முறையாக பெரியாற்றில் புதிய அணை என வள்ளக்கடவு வனப்பாதையில் தற்போதய அணைக்கு கீழே 1500மீட்டர் தொலைவில் ஆய்வுப்பணியை தொடங்கியது. இதிலும் தோல்வி கண்டதால், வழக்கறிஞர் ரசல்ஜாய் போன்றவர்கள் கேரள மக்களிடையே பெரியாறு அணை உடைந்து விடும் 35 லட்சம் மக்கள் இறப்பார்கள் என பொய்செய்தி பரப்ப தொடங்கினர்.

அணையின் உறுதியை நிலைநாட்டிய தமிழக அரசு
கடந்த 2021ல் நவம்பர் 30ல் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்திய, ஒருமாத காலத்தில் 12 நாட்கள் 142 அடியாகவும், மீதி 18 நாட்கள் 141.50 அடிக்கு குறையாமலும் தண்ணீர் நிலை நிறுத்தி, பெரியாறு அணை இன்னமும் பலமாகத்தான் உள்ளது என்பதை திமுக அரசு உறுதி செய்தது. அதேபோல் இந்தாண்டும் அணையில் 142 அடி தண்ணீர் தேக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. இன்றோ அல்லது நாளையோ அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த உள்ள நிலையில், கேரளா புதிய அணைக்கான ஆய்வு, திட்ட அறிக்கை என 4 முறை கைவிடப்பட்ட திட்டத்தை மீண்டும் கையிலெடுத்து மக்களை குழப்புவது இருமாநில மக்களின் நல்லுறவுக்கு ஊறுவிளைவிப்பதாகும்.

பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும்
கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கூறுகையில், புதிய அணை கட்டவேண்டும் என்றால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். அடுத்ததாக அந்த அணை நீரினை பயன்படுத்துபவர்களின் (தமிழ்நாட்டின்) அனுமதி பெற வேண்டும். பெரியாற்றில் புதிய அணை கட்ட சாத்தியமில்லை என்பது கேரள அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்கு தெரியும். 1979ல் மத்திய நீர்வள ஆணைய உத்தரவின்படி பெரியாறு அணையை பலப்படுத்த சிமெண்ட் கான்கிரீட் தொப்பி, கேபிள் ஆங்கரிங், சப்போர்ட் அணை ஆகிய பணிகள் செய்யப்பட்டது. இந்தப் பணிகள் செய்ததினாலேயே அணை புதிய அணைக்கு நிகராக பன்மடங்கு பலம் பெற்று உள்ளது. பெரியாறு அணை இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும், என்றார்.

பேபி அணையை பலப்படுத்த வேண்டும்
பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டதால் விவசாய நிலங்களில் 38 ஆயிரம் ஏக்கர் தரிசாக மாறியது. 26 ஆயிரம் ஏக்கர் இருபோக சாகுபடி நிலம் ஒருபோக சாகுபடியானது. ஆற்று நீரை நம்பிய 58 ஆயிரம் ஏக்கர் ஆழ்குழாய் சாகுபடிக்கு மாறியது. ஐந்து மாவட்டத்தில் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர். எனவே கேரளா புதிய அணை என்ற பேச்சை கைவிட்டு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி பேபி அணையை பலப்படுத்தி பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

2.12 லட்சம் ஏக்கரளவில் விவசாயம்
பெரியாறு அணை நீரால் 2,12,758 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு
( இருபோக சாகுபடி) 14,707 ஏக்கர், பிடிஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாய் ஆயக்கட்டு 5,146 ஏக்கர், பெரியாறு பிரதான கால்வாய் ஆயக்கட்டு சோழவந்தான் (இருபோக சாகுபடி) 45,041 ஏக்கர், பெரியாறு பிரதான கால்வாய் ஆயக்கட்டு மேலூர் (ஒருபோகம்) 85,563 ஏக்கர், பெரியாறு பிரதான கால்வாய் (நீட்சி) ஆயக்கட்டு சிவசங்கை (ஒருபோகம்) 38,248 ஏக்கர், திருமங்கலம் பிரதான கால்வாய் மற்றும் நீட்சி ( ஒருபோகம்) 19,439 ஏக்கர், 18ஆம் கால்வாய் (பழனிவேல் ராஜன் கால்வாய்) 4614 ஏக்கர்.

Tags : Periyar ,Theni , Good relations between the people of the two states, no need for a new dam in Periyar, 5 district farmers demand
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...