×

பேராசிரியர் அன்பழகன் திராவிட கருவூலம்: ஆவடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி மாநகர திமுக சார்பில், ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா  பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;

எத்தனையோ பதவிகள், பொறுப்புகள் வரலாம், போகலாம். ஆனால், தங்களின் செல்லப் பிள்ளையாகத்தான் நானிருப்பேன். தற்போது அமைச்சராக இருப்பதால், இருக்கும் பணிகளை சரியாக செய்யவேண்டிய கடமை உள்ளது. இனமான பேராசிரியர் தாத்தாவின் நூற்றாண்டு நிறைவு விழா, தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இளைஞரணி உறுப்பினர்கள், அமைச்சர் சா.மு.நாசரை பின்பற்றி, கட்சியில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். தனது பெயருக்கு முன்னால் ஊர் பெயரை சேர்த்துக்கொள்ள அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்காது. ஆவடியை தனது பெயருக்கு முன்னால் வைத்துக்கொள்ளும் தகுதி அமைச்சர் ஆவடி நாசருக்கு உண்டு.

பேராசிரியர் தாத்தா அன்பழகன், திராவிடத்தின் கருவூலம். எனது திருமணமும் பேராசிரியர் தலைமையில்தான் நடைபெற்றது. கலைஞரும் பேராசிரியரும் நெருக்கமாக பழகியுள்ளனர். கலைஞருக்குப் பிறகு மு.க.ஸ்டாலின்தான் கழகத்தை வழிநடத்த போகிறார் என கலைஞர் இருக்கும்போதே கூறியவர் பேராசிரியர். கழகத்தின் கறுப்பு, சிவப்பு கொடியை போல்தான் நானும் பேராசிரியரும் என்று ஏற்கெனவே கலைஞர் பெருமையுடன் கூறியுள்ளார்.

நம்பர் 1 முதல்வர் என்று பெயர் வாங்குவது பெரிதல்ல. நம்பர் 1 தமிழ்நாடு என்று பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் ஆசை என முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறுவார். இந்தியா டுடே பத்திரிகையில் வெளியிட்ட மாநில தரவரிசை பட்டியலில், தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ள தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இந்த கூட்டத்தில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், மாநகர செயலாளர் ஆசிம் ராஜா, பகுதி செயலாளர்கள் பேபி சேகர், நாராயண பிரசாத், ராஜேந்திரன், பொன்விஜயன், மண்டல குழு தலைவர்கள் ஜோதிலட்சுமி, அமுதா பேபி சேகர், வி.அம்மு, ஆவடி மாநகர நிர்வாகிகள் வீ.சிங்காரம், கு.சேகர், 40வது வார்டு உறுப்பினர் சத்யா கோ.ரவி, ஆவடி பாலா, ஆவடி பிரதிநிதி என்.ஆனந்தராஜ், திருநின்றவூர் தலைவர் உஷாராணி ரவி, திவை.ரவி, பிஎல்ஆர்.தேவியோகா, பிஎல்ஆர்.யோகா, திருநின்றவூர் ஜெ.பிரசன்னா மற்றும் வட்ட, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆவடி மாநகர திமுக அலுவலகத்தை திறந்து வைத்து, மாநகர எல்லையில் பிரமாண்ட கம்பத்தில் திமுக கொடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றிவைத்தார். பின்னர் 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்பட 100 மகளிருக்கு தையல் மெஷின், 20 கிரிக்கெட் அணிகளுக்கு கிட், 30 கால்பந்து வீரர்களுக்கு கிட் மற்றும் 41 சிலம்ப வீரர்களுக்கு கிட் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவருக்கு அமைச்சர் சா.மு.நாசர் வெள்ளி வீரவாள் பரிசளித்து வாழ்த்தினார்.

பூந்தமல்லி வழியாக வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னீர்குப்பம், வெற்றிலை தோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே பூந்தமல்லி நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை தலைமையில், மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் தர், மாவட்ட பிரதிநிதி சுதாகர், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். திருவேற்காடு நகர திமுக சார்பில், காடுவெட்டி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நகர செயலாளரும் நகரமன்ற தலைவருமான என்இகே.மூர்த்தி தலைமையில் மேளதாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags : Anmanzhagan Travidhi Treasury ,Minister ,Udhayanidhi Stalin ,General ,Awadi , Professor Anbazagan Dravida Treasury: Minister Udayanidhi Stalin's speech at a public meeting at Avadi
× RELATED ஆற்றல்மிகு செயல்வீரர் புகழேந்தியின்...