உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை புடினுக்கு பிரதமர் மோடி யோசனை: தொலைபேசியில் உரையாடல்

புதுடெல்லி: உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியும், அதிபர் புடினும் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடினர். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இரு தலைவர்களும் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு, ராணுவம் ஆகிய துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பது குறித்து பிரதமர் மோடி விளக்கினார். அதன் முக்கிய முன்னுரிமைகள் குறித்தும் புடினிடம் விளக்கினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்று நடத்தும் போது, இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி கூறினார். மேலும், இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதென ஒப்புக் கொண்டுள்ளனர். உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்’ என கூறப்பட்டுள்ளது. இந்தியா, ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடத்தப்படும். கடந்த ஆண்டு டெல்லியில் இம்மாநாடு நடந்த போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருகை தந்தார்.

இந்த ஆண்டுக்கான மாநாடு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் விரைவில் நடக்க உள்ளது. இம்முறை மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா செல்ல மாட்டார் என கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின. உக்ரைன் மீதான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதால், ரஷ்ய பயணத்தை மோடி தவிர்ப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இதுதொடர்பாக இரு அரசு தரப்பிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த சூழலில் பிரதமர் மோடி-புடின் தொலைபேசி உரையாடல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: