×

போக்சோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க்கிற்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு: தமிழகம் முழுவதும் அமல்படுத்த காவல்துறைக்கு ஆலோசனை

சென்னை: போக்சோ வழக்குகள் மற்றும் சிறார் சம்பந்தப்பட்ட குற்றங்களில் முறையான விசாரணைக்கு பின்பே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் முறையாக அமல்படுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு மாணவன் மஞ்சள் கயிற்றை கட்டிய விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் சிதம்பரம் நகர காவல் நிலைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், சிறார் குற்றங்களை கையாள்வது குறித்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், என்.ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் விவகாரத்தில் காவல்துறை செயல்பாடுகள் குறித்த அறிக்கையை, நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சந்துரு என்பவர் தாக்கல் செய்தார்.

அப்போது நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின் பெயரில் தென் மாவட்டங்களில் போக்சோ வழக்குகள் மற்றும் சிறார் தொடர்புடைய குற்றங்களில் முறையான விசாரணை முடிந்த பின்பே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டதாகவும், இதனால் தென் மாவட்டங்களில் போக்சோ மற்றும் சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிற்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். அதைப்போன்று தமிழகம் முழுவதும் அமல்படுத்தலாமே என காவல்துறைக்கு ஆலோசனை வழங்கினர். குற்ற சம்பவங்களில் சிறார்களை கையாள்வது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : POCSO ,South Zone ,Azra Garg ,Tamil Nadu , High Court Judges Appreciate South Zone IG Azra Garg for Acting on High Court Order in POCSO Case: Advise Police to Implement Across Tamil Nadu
× RELATED பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டுகள்...