×

கறவை மாடுகளில் தோல் கழலை நோயின் தாக்கம் குறித்து கால்நடை மருத்துவர்களுக்கான கருத்தரங்கம்

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கால்நடை நலக்கல்வி மையத்தின் சார்பாக கறவை மாடுகளில் தோல் கழலை நோயின் தாக்கம் மற்றும் அதன் கட்டுப்பாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழகம் முழுவதிலும் இருந்து தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு மாடுகளில் ஏற்படும் தோல் கழலை நோய் பற்றிய ஆய்வுகள் மற்றும் நோய் மேலாண்மை குறித்த தரவுகளும், அவர்களுடைய கள அளவிலான சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

இக்கருத்தரங்கை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், செல்வகுமார் துவக்கி வைத்து, கால்நடை மருத்துவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தோல் கழலை நோய் பற்றிய புத்தகங்களை வெளியிட்டு, தலைமை உரையாற்றினார். வளர்ந்து வரும் நோய்களால் கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு மற்றும் நோய் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். எல்லை தாண்டிய கால்நடை நோய்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டிய அவர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இந்த நோய்க்கான தடுப்பூசி ஒன்றை தொழில்நுட்ப பரிமாற்றம் செய்துள்ளதையும் குறிப்பிட்டார். இந்த நோய் குறித்த தகவல்களை கால்நடை மருத்துவர்கள் அறிந்துகொள்வதன் மூலம் முழு அளவில் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதையும் எடுத்துரைத்தார்.

Tags : Veterinarians , Seminar for Veterinarians on Impact of Cutaneous Disease in Dairy Cows
× RELATED கால்நடை மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்