பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு!

உடுமலை: மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் உஷார்படுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு கறிக்கோழி, முட்டை மற்றும் கோழித்தீவனங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதேப்போல் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வாத்துக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டயத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட காரணமாக தமிழக-கேரள எல்லையான திருப்பூர் மாவட்டம் உடுமலை-மூணார் சாலையில் நிரந்தர முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கால்நடை மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் 9/6 செக்போஸ்ட் மற்றும் சின்னார் பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து தெளித்த பின்னரே அனுமதித்து வருகின்றனர். இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பரவி வந்த பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.

தற்போது மழை, பனி காலம் தொடங்கி உள்ளதால் பறவை காய்ச்சல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் உஷார்படுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரளாவில் இருந்து உடுமலை வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக கால்நடைத்துறை சார்பில் 3 குழு அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

Related Stories: