×

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு விதவிதமாக தயாராகும் மெழுகுவர்த்திகள்: தொழுநோயில் இருந்து மீண்டு வந்தவர்கள் அசத்தல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொழு நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள் மூலமாக கிறிஸ்து மஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டி விதவிதமான மெழுகுவர்த்திகள் தயாரிக்கப்படுகிறது. தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் சுமார் 74 ஆண்டுகளுக்கு முன்பு அருட்சகோதரிகளால் செயின்ட் ஜோசப் தொழுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்டு சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தொழுநோய் பாதித்த நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று தொழு நோயில் இருந்து மீண்டு வந்த நபர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மருத்துவமனை வளாகத்திலேயே மெழுகுவர்த்தி தயாரிக்கும் சிறுதொழில் கூடம் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் தொழுநோயில் இருந்து மீண்டு வந்தவர்கள் பணியாற்றி மெழுகுவர்த்திகளை தயாரித்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

காலப்போக்கில் மருத்துவம் வளர்ந்ததை தொடர்ந்து பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தங்கள் வீடுகளிலேயே இருந்து விடுகின்றனர். கை, கால் போன்ற இடங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டு புண்களாக உள்ளவர்கள் மட்டுமே இங்கு வந்து சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் நோயில் இருந்து குணமானாலும் வெளியில் ஆதரவு இல்லாதவர்கள் தங்கள் இறுதிக்காலம் வரை இங்கேயே தங்கி உள்ளனர்.

இந்நிலையில் தற்போதுள்ள நபர்களைக் கொண்டு மெழுகுவர்த்தி தயாரிக்கும் பணிகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. தேவாலயங்களுக்கு தேவையான ஆறடி உயர மெழுகுவர்த்தி முதல் சிறிய அளவிலான மெழுகுவர்த்தி வரை இங்கு தயாரிக்கப்படுகிறது. அச்சுகள் மூலமாகவும், கைகளாலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா,கிறிஸ்துமஸ் மரம், வானதூதர், ஏஞ்சல், பைபிள் பாய், கிரீட்டிங்ஸ், சங்கு, பாட்டில், கிளாஸ், ஜெல்லி மேக்ஸ், இதயம், மீன், குருவி, ப்ளோட்டிங் ரோஸ், மல்டிகலர், டிரைபிளாஷ் போன்ற பொம்மை மெழுகுவர்த்திகள் மற்றும் ஆலயங்களில் பயன்படுத்தும் மெழுகுவர்த்திகள், 5 அடி, 6 அடி உயரமுள்ள மெழுகுவர்த்திகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மெழுகுவர்த்திகள் ரூ.3 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்துவ ஆலயங்களுக்கு தேவையான அனைத்து மெழுகுவர்த்திகளும் இங்கிருந்துதான் அனுப்பப்படுகிறது. இதில் வரக்கூடிய வருவாயைக் கொண்டு தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Christmas ,Tuticorin , Tuticorin, Christmas, New Year, variously prepared candles
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...