திண்டுக்கல் வெள்ளோடுவில் ராமக்கால் நீர்த்தேக்கத்தை தூர்வார வேண்டும்: மதகையும் சரிசெய்து முழுமையாக தண்ணீர் தேக்க கோரிக்கை

சின்னாளபட்டி: திண்டுக்கல் தாலுகா வெள்ளோடு ஊராட்சியில் உள்ள ராமக்கால்- ஆணை விழுந்தான் ஓடை நீர்த்தேக்கத்தை முறையாக தூர்வாருவதுடன், மதகையும் சரிசெய்து முழுமையாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் தாலுகா வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட சிறுமலை அடிவாரத்தில் உள்ளது ராமக்கால் மற்றும் ஆணை விழுந்தான் ஓடை நீர்த்தேக்கம்.

இந்த நீர்த்தேக்கத்தை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2008ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது வருவாய் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியின் ஏற்பாட்டால் சுமார் ரூ.5 கோடியே 65 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. ெதாடர்ந்து அப்போதைய பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் இந்த நீர்த்தேக்கத்தை திறந்து வைத்தார். சிறுமலை அடிவார பகுதயிலுள்ள வெள்ளோடு, செட்டியபட்டி, சிறுநாயக்கன்பட்டி, வேளாங்கண்ணிபுரம் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்கு நீர் ஆதாரமாக இந்த நீர்த்தேக்கம் உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகளாக பொதுப்பணி துறை அதிகாரிகள் வெள்ளோடு ஆணைவிழுந்தான் ஓடை மற்றும் ராமக்கால் நீர்த்தேக்கத்தை பராமரிக்காமல் விட்டு விட்டனர். குறிப்பாக நீர்த்தேக்கத்தை முழுமையாக தூர்வாரவில்லை. தவிர நீர்த்தேக்கத்தை சுற்றிலும் செடிகள் அடர்ந்து வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.மேலும் நீர்த்தேக்கத்தில் மதகு இடிந்து தண்ணீர் வீணாக வெளியேறி செல்கிறது. இதனால் தற்போது கடந்த ஒரு மாத காலமாக விட்டுவிட்டு மழை அதிகளவில் பெய்தும் கூட நீர்த்தேக்கத்தில் கால்பகுதி அளவு

கூட தண்ணீர் வரவில்லை. இதனால் வெள்ளோடு மற்றும் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

இதுகுறித்து வெள்ளோடு ஆரோன் கூறுகையில், ‘கடந்த 2008ல் திமுக ஆட்சியின் போது அமைச்சர் ஐ.பெரியசாமி எங்கள் பகுதி விவசாயிகளின் நலன் கருதி இந்த நீர்த்தேக்க குளத்தை சுமார் ரூ.6 கோடி மதிப்பில் கட்டி கொடுத்தார். அதன்பின்னர் அதிமுக ஆட்சியில் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆண்டிற்கு ஒருமுறை கூட நீர்த்தேக்கத்திற்கு வருவதில்லை. குறிப்பாக தொகுதியின் அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் ஒருமுறை கூட இந்த நீர்த்தேக்கத்தை வந்து பார்க்கவில்லை. பிறகு இவர்கள் எப்படி நீர்த்தேக்கத்தை பராமரிப்பார்கள்.எனவே ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உடனே இந்த நீர்த்தேக்கத்தை பராமரிக்க பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விவசாயிகளின் நலன் காக்க வேண்டும்’ என்றார்.

வெள்ளோடுவை சேர்ந்த ஸ்டீபன் கூறுகையில், ‘கடந்த 2006ம் வருடம் அணை திறந்த போது போட்ட தார்சாலைதான் இப்போதும் உள்ளது. அதனையும் அதிகாரிகள் பராமரிக்காமல் விட்டு விட்டனர்.அணையை சுற்றி முட்செடிகள் மரம் போல் வளர்ந்திருந்தது. வெள்ளோடு ஊராட்சி சார்பாக 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் முட்செடிகளை அகற்றி வருகின்றனர். இந்த அணை நிரம்பி வழியும் போது இங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.எனவே அணையை தூர்வாருவதுடன், சாலை, மின்விளக்கு வசதிகள் செய்து ெகாடுத்தால்mபொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.

முழுமையாக தண்ணீர் தேக்க நடவடிக்கை

வெள்ளோடு பகுதி விவசாயிகளின் புகார்கள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேட்ட போது, ‘கடந்த 2008ம் ஆண்டு அணைத்து விவசாயிகளின் நலன் கருதி கட்சி பேதமின்றி சிறுமலை அடிவார பகுதியில் ராமக்கால், ஆணைவிழுந்தான் ஓடை நீர்த்தேக்கத்தை கொண்டு வந்ததோடு ரெட்டியார்சத்திரம் பகுதியில் நாயோடை நீர் தேக்கத்தை உருவாக்கினோம். அதன்பின் ஆட்சியில் அமர்ந்த அதிமுக அரசு 10 ஆண்டுகளாக 2 அணையையும் பராமரிக்கவில்லை. விரைவில் ஆணைவிழுந்தான் ஓடை, ராமக்கால் நீர்த்தேக்கத்தை சீரமைப்பதோடு மழை பெய்தால் முழுமையாக தண்ணீர் தேங்கும் அளவிற்கு தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: