×

நவீன வசதிகளுடன் சென்னை முழுவதும் கட்டணமில்லா தூய்மையான கழிவறை!: சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் மாநகராட்சி நடவடிக்கை..!!

சென்னை: சென்னை முழுவதும் வசிக்கும் மக்களுக்கு கட்டணமில்லா தூய்மையான கழிவறை என்ற இலக்கை நோக்கி சென்னை மாநகராட்சி பணிகளை தொடங்கியுள்ளது. கல்வி, சுகாதாரம் இவற்றோடு தரமான சாலைகள், பொது கழிவறைகளும் தான் ஒரு மாநகரத்தின் தரத்தை குறிக்கும் முக்கிய அடையாளங்கள் ஆகும். அந்த வகையில், சென்னை மாநகரை பொறுத்தவரையில் பொதுமக்கள் தேவைக்கு நிகரான பொதுக்கழிவறைகள் என்ற நிலையை தற்போது வரை எட்டவில்லை. இதனை சீர்செய்ய சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை முழுவதும் பொதுமக்களுக்கு கட்டணமில்லா தூய்மையான கழிவறை என்ற இலக்கை நோக்கி சென்னை மாநகராட்சி பணிகளை துவங்கியுள்ளது.

பொது கழிவறை என்றாலே அசுத்தம் என்ற பொது எண்ணத்தை மாற்றி, பொது கழிவறை பயன்பாட்டை மக்களிடையே ஊக்குவிக்க திட்டமிட்டுள்ள சென்னை மாநகராட்சி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முதற்கட்டமாக 9 பொது கழிப்பறைகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்தியுள்ளனர். வெளி சுற்றில் ஓவியங்கள், பெண்களுக்கான சானிடரி நாப்கின் வசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சென்றுவர சாய்தள பாதை, தடையில்லா தண்ணீர் விநியோகம் என மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த கழிவறைகளின் தரம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அலாரம் பொத்தான்கள் கூடிய கருவியும் பொறுத்தப்பட்டிருக்கிறது.

சென்னை முழுவதும் 63 கோடி ரூபாய் செலவில் 500 கழிவறைகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருக்கும் இ - டாய்லெட்டுகளையும் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள கழிவறைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, இங்குள்ள பொது கழிவறைகளை சர்வதேச நாடுகள் எடுத்துக்காட்டாக கூற வேண்டும் என்ற நிலையை எட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறது.

Tags : Chennai ,Singarach , Chennai, Free Clean Toilet, Singarach Chennai 2.0
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...