×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று நரிக்குறவர், குருவிக்காரர்கள் எஸ்டி பட்டியலில் இணைப்பு: பழங்குடியினர் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

புதுடெல்லி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாிந்துரையை ஏற்று பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 19ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தநிலையில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. பழங்குடியினர் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை முன்மொழிந்த பழங்குடியினர் விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறுகையில்,’மக்களவையில் முன்மொழியப்பட்ட இந்த திருத்த சட்டம் தமிழ்நாட்டில் பழங்குடியின சமூகங்களுக்கு நீதி வழங்க முயல்கிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. தமிழ்நாடு அரசின் பரிந்துரையின் அடிப்படையில்  இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்துடன் கலந்தாலோசித்த பிறகு, 1950ஆம் ஆண்டு அரசியலமைப்புப்படி பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அட்டவணை திருத்தப்பட்டுள்ளது. இந்த இரு சமூகத்தினரையும் எஸ்டி பட்டியலில் சேர்க்கும் முடிவால் சுமார் 27,000 பேர் பயனடைவார்கள்’ என்றார். இதன்மூலம் பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் - குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு உரிமையுடையவர்கள்.


Tags : Chief Minister ,M.K.Stal ,Narikuvar ,Sparrows ,Lok Sabha , Accepting Chief Minister M.K.Stal's recommendation, the foxes, sparrows are attached to the ST list: Tribal Amendment Bill passed in the Lok Sabha
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...