×

2024 ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்

கீவ் : ‘‘பாரீசில் வரும் 2024ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. ரஷ்யாவை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்’’ என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 2024, ஜூலை 26 முதல் ஆக.11ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

இது தொடர்பான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உயர்மட்டக் குழு கூட்டம் லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது. இக்கூட்டத்தில் ரஷ்யாவின் பிரதிநிதியும் பங்கேற்றார். இதில், ‘2024 ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களை பங்கேற்க செய்ய வேண்டும். அதற்கான சாத்தியக்கூறுகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கண்டறிய வேண்டும்’ என்று அமெரிக்காவின் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் கமிட்டியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு உக்ரைன் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘2024 ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக ரஷ்யாவை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்’ என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக்கிடம், உக்ரைன் அதிபர் ெஜலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது: கடந்த பிப்ரவரி முதல் தற்போது வரை ரஷ்ய ராணுவம் கண்மூடித்தனமாக, சர்வதேச போர் விதிமுறைகளை மீறி எங்கள் நாட்டில் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது ஏவுகணைகள், ராக்கெட் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக இன்று வரை உக்ரைனை சேர்ந்த 184 விளையாட்டு வீரர்கள், ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

அப்பட்டமாக போர் விதிமுறைகளை ரஷ்யா மீறிக் கொண்டிருக்கிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் ரஷ்யாவை புறக்கணிக்க வேண்டும். அந்த நாட்டை தனிமைப்படுத்த வேண்டும். அது ஒன்றே ரஷ்யாவுக்கு சரியான பதிலடியாக அமையும்.

ஏனெனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளால் உலகின் ஒட்டுமொத்த அமைதிக்கான அஸ்திவாரமே ஆட்டம் கண்டுள்ளது. மனிதத்தின் மதிப்புகள் தரைமட்டமாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நீங்கள் நடுநிலை வகிக்க முடியாது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் ரஷ்யாவின் பிரதிநிதி பங்கேற்க அனுமதி அளித்திருக்கக் கூடாது. அவருக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதியளித்தது, எங்களுக்கு வருத்தமளிக்கிறது.

கடந்த பிப்ரவரியில் போர் துவங்கியதில் இருந்து, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையே தொடர வேண்டும். குறிப்பாக ஒலிம்பிக் போன்றதொரு மிகப்பெரிய சர்வதேச போட்டிகளில் ரஷ்யாவை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சிறையில் சிறுவர்களுக்கு கொடுமை?: இந்தப் போரில் ரஷ்யா, உக்ரைனின் அப்பாவி இளைஞர்கள் பலரை கைது செய்துள்ளது. உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள சிறைகளில் இவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் உள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் கெர்சான் நகரில் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டது. இதில் கெர்சானில் உள்ள சிறைகளில் உக்ரைனின் அப்பாவி இளைஞர்களும், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரையும் உக்ரைன் ராணுவத்தினர் விடுதலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக உக்ரைன் மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற பிரதிநிதி டிமிட்ரோ லூபினெஸ் கூறுகையில், ‘தங்களை ரஷ்ய ராணுவத்தினர் மிகவும் மோசமாக நடத்தினர் என்றும் தங்களை அடித்து துன்புறுத்தினர் என்றும் சிறையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் புகார் கூறினர். கெர்சானில் மட்டும் 4 சிறைகள், அந்தப் பிராந்தியத்தில் மேலும் 10 சிறைகள் உள்ளன. அந்த சிறைகளில் குழந்தைகள் தனி செல்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை ரஷ்ய ராணுவ வீரர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் அனைத்துமே எங்களிடம் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார். உக்ரைனின் இந்த குற்றச்சாட்டிற்கு ரஷ்ய ராணுவம் வழக்கம் போல் மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags : Russia ,2024 Olympics ,President ,Zelensky , Total boycott of Russia from 2024 Olympics: Ukrainian President Zelensky insists
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...