×

குமரியின் சபரிமலை என்றழைக்கப்படும் குபேர ஐயப்ப சுவாமி கோயிலில் குவியும் பக்தர்கள்

அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் அருகே பொட்டல்குளத்தில் குமரியின் சபரிமலை என்று அழைக்கப்படும் குபேர ஐயப்ப சுவாமி கோயில் ஐயன்மலை மீது உள்ளது. இங்கும் 18 படிகள் ஏறி சென்று தான் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். பம்பை நதி போல் மருந்துவாழ்மலையில் பிரதான கால்வாயும் இங்கு செல்கிறது. சபரிமலைக்கு சென்று வந்த திருப்பதியும், மகிழ்ச்சியும் இங்கும் கிடைக்கிறது என்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.

கொரோனா காலகட்டத்தில் சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் தமிழக பக்தர்கள் பெரும்பாலானோர் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த குறையை போக்கும் வண்ணம் அப்போது குமரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குபேர ஐயப்ப சாமி கோயிலுக்கு இருமுடி கட்டி வந்து வழிபட்டு சென்று விரதத்தை முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்்கது.

இந்த ஆண்டும் கோயிலில் கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கன்னியாகுமரியில் தினசரி குவியும் ஐயப்ப பக்தர்கள் குபேர ஐயப்ப கோயில் வந்து தரிசித்து செல்கின்றனர். இதனால் கார்த்திகை பிறந்தது முதல் ேகாயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டத்தை காண முடிகிறது.

இந்த கோயிலின் மலை உச்சியில் இருந்து சூரிய உதயத்தை பார்க்க முடியும். காலை, மாலை வேளைகளில் கருடன் சன்னிதானத்தில் வட்டமிடுவதையும் காண முடியும். மலையில் அமைந்துள்ள 18 ஆம் படிகளுக்கு கடுத்தசுவாமி, கருப்பசுவாமி காவலர்களாக உள்ளனர். பொட்டல்குளம் ஊரை சேர்ந்த சித்தர் தியாகராஜ சுவாமிகள் பூசாரியாக இருந்து வருகிறார்.

இம்மலையில் அடிவாரத்தில் மணிகண்ட ஆஸ்ரமம் உள்ளது. இங்கு வரும் ஐயப்ப  பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் சித்தர் தியாகராஜ சுவாமிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் ஐயப்பன், முத்தமிழ்செல்வன் ஆகியோர் செய்து வருகின்றனர். கோயிலில் அனைத்து சனிக்கிழமைகளிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிறப்புபூஜை நடைபெறும்.

அதுபோல் தமிழ் மாதங்கள் 1 முதல் 5ம் தேதி வரையிலும், கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முதல் தை மாதம் ஐந்தாம் தேதி வரை விஷேச நாட்கள் ஆகும். மேலும் மண்டல பூஜை ஆண்டுதோறும் மார்கழி மாதம் விமரிசையாக நடைபெறும். கோயிலுக்கு நாகர்கோவில் இருந்து செல்ல 13 கி.மீ பயணிக்க வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து செல்ல 7 கி.மீட்டரும், சுசீந்திரத்தில் இருந்து 6 கி.மீட்டரும் பயணித்து செல்ல வேண்டும்.


Tags : Kubera Ayyappa Swamy Temple ,Sabarimala ,Kumari , Devotees flock to the Kubera Ayyappa Swamy Temple, also known as the Sabarimala of Kumari.
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...