×

30 ஆண்டுக்கு பின் ஏரி நிரம்பியது: திமிரி அருகே விவசாயிகள் மகிழ்ச்சி

கலவை: திமிரி அருகே சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.  மாண்டஸ் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக வடமாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களும் நிரம்பிய நிலையில் உள்ளது. பாலாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலையில் திமிரி அடுத்த பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கீழ்ப்பாடி ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 30 ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்தது.

கடந்த சில ஆண்டுகளில் வடமாவட்டங்களை உலுக்கிய தானே புயல், கஜா, வர்தா உள்ளிட்ட புயல் மற்றும் தொடர்மழை பெய்தும் இந்த ஏரி சிறிதுகூட நிரம்பாமல் இருந்தது. இதனால் ஏரியை சுற்றிலும் உள்ள விவசாய நிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

இந்நிலையில் ‘மாண்டஸ்’ புயல் ஏற்பட்ட நிலையில் கடந்த 5 நாட்களாக வட மாவட்டங்கள் முழுவதும் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கீழ்ப்பாடி ஏரிக்கு தண்ணீர் வரத்து நாலாப்புறமும் அதிகரித்தது. அதன்பேரில் ஏரி நிரம்பி நேற்று மாலை உபரிநீர் வெளியேறியது. இதையறிந்த  கிராம மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் ஏரிக்கு மதகு பகுதியில் மாலையிட்டு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.  30 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


Tags : Timiri , Lake filled after 30 years: Farmers near Timiri happy
× RELATED கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு