மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி திருவிழா டிச.28ல் துவங்குகிறது

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மார்கழி மாத திருவிழாக்கள் டிச.28ம் தேதி துவங்குகிறது. இதன்படி நடைபெற உள்ள விழாக்கள் விபரம் வருமாறு: எண்ணெய் காப்பு உற்சவம் வரும் 28ம் தேதி துவங்கி 2023ம் ஆண்டு ஜன.5ம் தேதி வரை நடக்கிறது. உற்சவ நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் புதுமண்டபத்தில் எழுந்தருளி, அங்கு தைலகாப்பு மற்றும் தீபாராதனை நடைபெறும். பின் அங்கிருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து மீண்டும் திருக்கோயில் வந்தடைவார்.

ஜன.4ம் தேதி கோரதத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி சித்திரை வீதிகளில் புறப்பாடும், ஜன.5ம் தேதி கனக தண்டியலில் அம்மன் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் உலா வருதல், ஜன.6ம் தேதி திருவாதிரை அன்று பொன்னூஞ்சல் மண்டபத்திலிருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளை சுற்றி வருதலும் நடக்கிறது.

இதேபோல் திருவெண்பா உற்சவம் டிச.28 முதல் ஜன.6 வரை நடக்கிறது. இந்த 10 நாட்களும் மாணிக்கவாசகர் 300 கால் மண்டபம், அருள்மிகு நடராஜர் சன்னதி முன்பு எழுந்தருளி தேவார கோஷ்டியினரால் திருவெண்பா பாடி, தீபாராதனை நடைபெறும். ஜன.6ல் பொன்னூஞ்சல், அன்று இரவு திருஞானசம்பந்தர், சுவாமிகள் சன்னதியில் திருவெண்பா பாடி முடிந்தவுடன், சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுத்தருளி ஆடி வீதிகளில் சுற்றிவருவர். இதனைத் தொடர்ந்து நடராஜ பெருமானுக்கு உகந்த மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று ஆருத்ரா தரிசனம், ஜன.5ம் தேதி நள்ளிரவு முதல் ஜன.6ம் தேதி வரை அபிஷேகம் நடைபெறும்.

 

திருவிழாவையொட்டி, பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சேவார்த்திகளும் அபிஷேக பொருட்களான பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள் பொடி, திரவிய பொடி, எண்ணெய் மற்றும் இதர அபிஷேகப் பொருட்களை ஜன.5ம் தேதி இரவு 7 மணிக்குள் திருக்கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்குமாறு பக்தர்களிடம் கோயில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. மேலும், டிச.28 முதல் ஜன.6ம் தேதி வரை, உற்சவ நாட்களில் திருக்கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ, தங்க ரத உலா, திருக்கல்யாணம் மற்றும் வைர கிரீடம் சாத்துதல் போன்றவை நடத்திட இயலாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளை அஷ்டமி சப்பரம்: இதற்கிடையே, ஆண்டு தோறும் மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி அஷ்டமி சப்பரம் விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மாதப்பிறப்பின் முதல்நாளான நாளை (டிச. 16) அஷ்டமி வருகிறது. இதையொட்டி அன்றைய தினம் மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரரேசுவரர் தனித்தனி தேர்களில் வெளிவீதிகளில் வலம் வருவது வழக்கம். இதற்காக அஷ்டமி சப்பரங்களை அலங்கரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: