×

சேதமான மீன்பிடி படகுகள் வலைகளுக்கு நிவாரணம்: எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ வலியுறுத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் காரணமாக சேதமான மீன்பிடி படகுகள், வலைகள் மற்றும் இன்ஜின்களை நேற்று எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் சேதமான படகுகள், வலைகள், இன்ஜின்களை சீரமைக்க மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தினார்.  

மாமல்லபுரம் அருகே கடந்த 9ம் தேதி நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதனால் வெண்புருஷம் உள்பட பல்வேறு மீனவர் குப்பம் பகுதிகளில் வீசிய சுமார் 60 கிமீ வேகத்தில் வீசிய பலத்த சூறாவளி காற்றில் சிக்கி 20க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள், 50க்கும் மேற்பட்ட வலைகள் மற்றும் மணல் குவியல்களில் சிக்கி 10க்கும் மேற்பட்ட இன்ஜின்கள் பலத்த சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்ததும் நேற்று திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, மாமல்லபுரம் மீனவர் குப்பம் பகுதி மீனவர்களிடம் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் சேத விவரங்களை கேட்டறிந்தனர். இந்த ஆய்வில், மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய விசிக செயலாளர் இசிஆர் அன்பு, மாமல்லபுரம் நகர செயலாளர் ஐயப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதுகுறித்து எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ கூறுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மாண்டஸ் புயல் பாதிப்புகளை கடந்த 3 நாட்களாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து, உரிய கணக்கெடுப்பு நடத்த அறிவுரை வழங்கினர்.

இதன்படி, மீனவ பகுதிகளில் கணக்கெடுப்பு பணி முழுமையாக முடிந்துள்ளது. இப்புயலில் மீனவர்களின் படகுகள், வலைகள் மற்றும் மோட்டார் இன்ஜின்கள் சேதமாகி, வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மீனவர்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags : SS Balaji , Relief for damaged fishing boat nets: SS Balaji MLA insists
× RELATED திருப்போரூர் தொகுதிக்கு ரூ.101.05...