×

2வது அரையிறுதி போட்டி; மொராக்கோவை வீழ்த்தி பிரான்ஸ் அதிரடி வெற்றி: 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி

தோகா: கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2வது அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி மொராக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தோகாவின் அல்பேத் மைதானத்தில் நேற்று நள்ளிவு 12.30 மணிக்கு நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும், முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மொராக்கோ அணியும் மோதின. உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற மொராக்கோ அணி மீதும், நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மீதும் ரசிகர்களுக்கு சமமான எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த போட்டியில் சாம்பியன்ஸ் சாபத்தை அசால்ட்டாக கடந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் பிரான்சும், உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்கா அணி என்ற வரலாறோடு மொராக்கோவும் களமிறங்கியது. அதுமட்டுமல்லாமல் இந்த உலகக்கோப்பையில் எதிரணியை ஒரு கூட கோல் அடிக்கவிடாமல் மொராக்கோ அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது.

இந்த சாதனையை துவம்சம் செய்யும் வகையில் ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்திலேயே பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் முதல் கோல் அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அணியின் அட்டாக் மேலும் அதிகரித்தது. பெரும்பாலும் பிரான்ஸ் அணி வீரர்களே பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனிடையே 17வது நிமிடத்தில் ஜூருட்-க்கு கோல் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். அதேபோல் 36வது நிமிடத்தில் செளமேனி அபார ஆட்டத்தால் மீண்டும் ஜீரூட்க்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதையும் அவர் வீணடித்தார்.

இதனைத் தொடர்ந்து மொராக்கோ அணி அட்டாக்கில் பாய தொடங்கியது. ஒவ்வொரு முறையும் ரைட் விங்கில் மொராக்கோ பாய்ந்தபோது, கார்னர் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தது. அதில் கோல் அடிக்க எடுத்த வாய்ப்பை, கடைசி நொடியில் பிரான்ஸ் கோல்கீப்பர் லூரிஸ் தடுத்தார். தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியின் முன்னிலையுடன் முடிவுக்கு வந்தது.

பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் ரசிகர்களின் கரகோஷத்தோடு மொராக்கோ அணி களமிறங்கியது. மொராக்கோ அணி அட்டாக் மேல் அட்டாக் செய்தது. கிட்டத்தட்ட எந்த நேரத்திலும் மொராக்கோ அணிக்கு கோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக 79வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் எம்பாப்பே 5 வீரர்களுக்கு நடுவே கொடுத்த மேஜிக்கல் பாஸை, இளம் வீரர் முவானி கோல் அடித்தார். இந்த கோல் மூலம் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பின்னர் மொராக்கோ அணி வீரர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இருப்பினும் இரண்டாம் பாதியின் கூடுதல் நேரத்தில் மொராக்கோ அணி வீரர்கள் கடுமையாக முயற்சி எடுத்தும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிபா உலக கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக முன்னேறியுள்ளது.

கடைசியாக 1958ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் பிரேசில் அணி வெற்றிபெற்ற பின், 1962ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி என்ற சாதனையை பிரான்ஸ் படைத்துள்ளது.

இறுதிப்போட்டியில் வலிமையான அர்ஜென்டினா அணியை எதிர்த்து நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி விளையாட உள்ளது. நட்சத்திர வீரர்களான மெஸ்சி மற்றும் எம்பாப்பே நேரடியாக மோத உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிபா உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி வரும் 18ம் தேதி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : France ,Morocco , 2nd semi-final match; France thrash Morocco: Qualify for 2nd final
× RELATED சென்னை -பாரிஸ் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு: 5 மணி நேரம் தாமதம்