பெரியபாளையம் அருகே பரபரப்பு; கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடித்தபோது தவறிவிழுந்து வாலிபர் திடீர் மாயம்: தீயணைப்புத்துறை தேடுகிறது

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடித்தபோது தவறிவிழுந்து மாயமான வாலிபரை தீயணைப் புத்துறையினர் படகுமூலம் தேடி வருகின்றனர். எம்எல்ஏ சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  இந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் ஆரிக்கப்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி. இவரது மகன் நவீன்குமார் (19). இவர், நேற்று மாலை 6 மணியளவில்  அதே பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் தடுப்பணையில் மீன் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறிவிழுந்துள்ளார். இதையறிந்ததும் கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

இதையடுத்து இதுகுறித்து வெங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார்  சம்பவ இடத்துக்கு வந்தனர். இதையடுத்து வந்த ஆவடி தீயணைப்புதுறையினர் ஆற்றில் தவறிவிழுந்த வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்த சம்பவத்தை அறிந்ததும் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சம்பவ இடத்துக்கு வந்து  மீன்பிடித்து கொண்டிருந்தபோது வாலிபர்  தவறிவிழுந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர், போலீஸ் அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி எம்எல்ஏ கூறினார்.

அப்போது அப்பகுதி மக்கள், “பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து எங்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் இதுபோன்று நடந்திருக்காது. திருக்கண்டலம்-ஆரிக்கம்பேடு இடையே ஆற்றில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த ஆண்டு இதே இடத்தில் ஒரு வாலிபர் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார்.

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீரை உடனே  நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தீயணைப்புத்துறையினர் ஆற்றில் விழுந்து மாயமான வாலிபரை படகு மூலம் தொடந்து தேடி வருகின்றனர்.

Related Stories: