×

மாஜி போலீஸ் ஏட்டுவை கொன்று ஆற்றில் சடலம் வீச்சு: 19 வயது மகன் கூட்டாளியுடன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார்(48). இவர் முன்னாள் போலீஸ் ஏட்டு. இவரது மனைவி சித்ரா (38). இவர் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் ஜெகதீஷ்குமார் (19). கடந்த 1997ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த செந்தில்குமார், பர்கூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஏட்டாக பணியாற்றினார். கடந்த 2009ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து, தற்போது தேன்கனிக்கோட்டை டிஎஸ்பியாக பணியாற்றி வரும் முரளி என்பவர் மீது, செந்தில்குமாருக்கு இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது ஜீப்பை இரவு நேரத்தில் எடுத்துச் சென்று, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள பெரிய பள்ளத்தில் உருட்டி விட்டார்.

இதன்காரணமாக செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதற்கு முன்னர் கிருஷ்ணகிரியில் பணிபுரிந்தபோது, ஆயுதப்படை போலீஸ் வாகனத்தை பாரூர் ஏரியில் தள்ளிவிட்ட வழக்கும் அவர் மீது இருந்தது. இந்த நிலையில், தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால், கடந்த 2012ம் ஆண்டு போலீஸ் பணியில் இருந்து செந்தில்குமார் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதனையடுத்து, ஊத்தங்கரை கவர்னர்தோப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி மாயமானார். இதுகுறித்து அவரது தாய் பாக்கியம்(65) கல்லாவி போலீசிலும் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘’கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி மாயமான செந்தில்குமார் மற்றும் அவரது மகன் ஜெகதீஷ்குமார், மற்றொருவரின் செல்போன் சிக்னல் ஒரே இடத்தை காட்டியுள்ளது. பின்னர், அனைத்தும் ஒரே நேரத்தில் சுவிட்ச் ஆப் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஜெகதீஷ்குமாருடன் இருந்த மற்றொரு செல்போன் எண்ணை வைத்து விசாரிக்கையில், அவர் ஊத்தங்கரை அடுத்த பாவக்கல்லை சேர்ந்த கமல்ராஜ்(37) என்பது தெரிந்தது. அவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் அவர்கள் இருவரையும் ஊத்தங்கரை போலீசார் பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் மீண்டும் ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு  அழைத்து விசாரித்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்த அவர்கள், நேற்று கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சவா முன்பு ஆஜராகி, கடந்த செப்டம்பர் 16ம் தேதி செந்தில்குமாரை அடித்துக் கொலை செய்து, பாவக்கல் அருகே உள்ள தென்பெண்ணையாற்றில் வீசினோம் என்று ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

செந்தில்குமார் கொலை குறித்து அவரது மனைவியும், எஸ்.எஸ்.ஐ.யுமான சித்ராவிடம் ஊத்தங்கரை டிஎஸ்பி அமலஅட்வின் விசாரணை நடத்தி வருகிறார். மாயமானதாக கூறப்பட்ட போலீஸ்காரர், அவரது மகனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Attu , Ex-cop kills Attu, throws body in river: 19-year-old son surrenders in court with accomplice
× RELATED லாரி டயர் வெடித்து ஏட்டு உட்பட இருவர் படுகாயம்