×

காங்கோ தலைநகர் கின்ஷாசாவை வெள்ளம் சூழந்தது: வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 141 பேர் உயிரிழப்பு..!

கின்ஷாசா: மத்திய ஆப்பரிக்க நாடான காங்கோவில் கனமழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 141 பேர் உயிரிழந்து விட்டனர். காங்கோ நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால், முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தலைநகர் கின்ஷாசாவில் கடந்த  திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய் காலை வரை கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழந்துள்ளது. நூறுக்கணக்கான வீடுகளை வெள்ளம் அடித்து சென்று விட்டதால் தலைநகரில் மட்டும் சுமார் 20 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

கனமழை, வெள்ளத்தால் கின்ஷாசா நகரின் பல பகுதிகளில் நிலச்சரிவு; இதில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் 141 பேர் உயிரிழந்தது விட்டதாக காங்கோ பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகள் மற்றும் சாலைகளை பல அடுக்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மழை, வெள்ளம் காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் மீட்பு மற்றும் நிவாரண பணி நடைபெற்று வருகிறது. காங்கோ ஆற்றங்கரைகளில் உள்ள 70 மீனவ கிராமங்கள் தனித்தீவுகளாகி விட்டதால் ஹெலிகாப்டர் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக காங்கோ அரசு கூறியுள்ளது. வெள்ளம் , நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


Tags : Kinshasa , Congo, floods, landslides, casualties
× RELATED காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை: சுகாதார அவசர நிலை பிரகடனம்