பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தை புறக்கணித்த தெற்கு ரயில்வே: திட்ட கருத்துருவுக்கும் அனுமதியளிக்காத அவலம்

மதுரை: பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தெற்கு ரயில்வே ஒன்றிரண்டு ரயில்  நீட்டிப்புகளைத் தவிர, பெரிய அறிவிப்புகளை கடந்த 3 ஆண்டுகளாக வெளியிடவில்லை  என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயில்வே மண்டலத்தின் சார்பில் பொதுவாக புதிய ரயில்கள் இயக்கம், புதிய  இருப்புப்பாதைகள் அமைத்தல், இருவழிப்பாதைகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்திற்கு கடந்த 8 ஆண்டுகளாக புதியதாக எந்தவொரு  திட்டமும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக, தமிழக மக்களுக்கு தெற்கு  ரயில்வேயால் எந்தவொரு பயனும் இல்லை. தற்போது இருக்கிற  ரயில்களை மட்டும் இயக்கினால் போதும் என்ற மனநிலையில் உள்ளது. புதிதாக  ரயில்கள், திட்டங்கள் என ஒன்றுமே இல்லை. அதேநேரத்தில், தென்மத்திய  மண்டலம் சார்பில், தாம்பரத்திலிருந்து ஐதராபாத் செல்லும் சார்மினார் ரயிலை  திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய  திட்டக்கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திட்டக்கருத்துருக்கு தெற்கு  ரயில்வே இதுவரை அனுமதியளிக்கவில்லை. இந்த ரயில் நீட்டிப்பு என்பது 15  முதல் 20 ஆண்டுகால கோரிக்கையாகும்.

தமிழகத்தின் தென்மாவட்ட  பகுதிகளிலிருந்து தெலங்கானாவின் தலைநகரான  ஐதராபாத்துக்கு செல்ல நேரடி  தினசரி ரயில் வசதியில்லை. திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சி போன்ற  நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஐதராபாத்துக்கு வேலைவாய்ப்பு  மற்றும் பல்வேறு பணிகள் நிமித்தமாக தினசரி சென்று வருகின்றனர். தெலங்கானா  மற்றும் ஆந்திராவிலிருந்து விழுப்புரம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி  மற்றும் கன்னியாகுமரி சுற்றுலா இடங்களுக்கு வரும் பயணிகளுக்கு  நேரடியாக வருவதற்கு எந்தவொரு தினசரி ரயிலும் இல்லை. மேலும், தமிழக பயணிகள் பயன்படும் விதத்தில், 2019 பாராளுமன்ற   தேர்தலுக்குப்பிறகு தெற்கு ரயில்வே ஒன்றிரண்டு ரயில் நீட்டிப்புகளைத்தவிர   பெரிய அறிவிப்புகளை கடந்த 3 ஆண்டுகளாக இதுவரை வெளியிடவில்லை.

தற்போது  தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து ஐதராபாத்துக்கு செல்ல வேண்டுமானால்   காலையில் சென்னை சென்று, மாலையில் சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு  செல்லும் ரயிலில் செல்ல வேண்டும். பகல் நேரம் முழுவதும் சென்னையில்  வீணாவதால் தென்மாவட்ட  பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். 2008ம் ஆண்டு  கச்சிகுடாவிலிருந்து கன்னியாகுமரிக்கு ரயில் இயக்க 2008ம் ஆண்டு நடைபெற்ற  ரயில் கால அட்டவணை மாநாட்டில் வைத்து திட்டக்கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது.  இதற்கும் தெற்கு ரயில்வே அனுமதி கொடுக்கவில்லை.

  இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், ‘‘தெற்கு ரயில்வேயில் எந்தவொரு மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள், சலுகைகள் அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகிறோம்’’ என்றார்.

முந்தைய திட்ட  கருத்துருக்கள்

* 2009ம்  ஆண்டு கச்சிகுடாவிலிருந்து கன்னியாகுமரி,  செகந்திராபாத்-ராமேஸ்வரம் ரயில்  இயக்க தென்மத்திய ரயில்வே திட்டக்கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது.

* 2008ம்  ஆண்டு கச்சிகுடாவிலிருந்து கன்னியாகுமரிக்கு ரயில் இயக்க 2008ம் ஆண்டு  நடைபெற்ற ரயில் கால அட்டவணை மாநாட்டில் வைத்து திட்டக்கருத்துரு  சமர்ப்பிக்கப்பட்டது.

* 2016ம் ஆண்டு ஐதராபாத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வாரத்துக்கு 2 முறை ரயில் இயக்க திட்டக்கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது.

* 2017ம்  ஆண்டு திருவனந்தபுரம் - செகந்திராபாத் வழி நாகர்கோவில் ரயில் தென்மத்திய  ரயில்வே சார்பில் திட்டக்கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது.

* 2018ம் ஆண்டு  ரயில்காலஅட்டவணை மாநாட்டில் மதுரை-கச்சிகுடா வாராந்திர ரயிலை கன்னியாகுமரி  வரை நீட்டிக்க திட்டக்கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது.

* தற்போது 2021ம் ஆண்டு ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க திட்டக்கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: