×

பிற்கால பாண்டியர் கால சிற்பம் மானாமதுரையில் கண்டுபிடிப்பு

மானாமதுரை: மானாமதுரை அருகே பிற்கால பாண்டியர்களின் நிசும்பன் சூதனி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சியில் பழமையான சிற்பம் இருப்பதாக, அந்த ஊரை சேர்ந்த ராமலிங்க அம்பலம் தகவல் கொடுத்தார். இதையடுத்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், முனைவர் தாமரைக்கண்ணன் மற்றும் க.புதுக்குளத்தை சேர்ந்த சிவக்குமார் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிற்பம் பிற்கால பாண்டியர் கலை பாணியில் அமைந்த நிசும்பன் சூதனி சிற்பம் என்று தெரியவந்தது.

இதுகுறித்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தினர் கூறியதாவது:
இந்த சிற்பம் நான்கரை அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் பகுதிக்கு நான்கு கரங்கள் வீதம் எட்டு கரங்கள் உள்ளன. இடையில் கச்சை அணிந்தபடி வலது காலை பீடத்தில் குத்த வைத்தும், இடது காலை நிசும்பன் தலைமீது வைத்தும் உட்குதியாசன கோலத்தில் சிற்பம் பிற்கால பாண்டியர் கால கைவண்ணத்தில் வடிக்கப்பட்டுள்ளது. இந்த நிசும்பன் சூதனிக்கு சோழர் காலத்தில் தஞ்சையில் விஜயபாலன் என்ற சோழ மன்னன் 12ம் நூற்றாண்டில் முதன் முதலில் கோயில் கட்டி வழிபட்டுள்ளார்.

அந்த வகையில் பாண்டிய தேசத்திலும் பிற்கால பாண்டியர்கள் அந்த காலகட்டத்தில் நிசும்பன்சூதனிக்கு வெள்ளிக்குறிச்சியில் தனி கோயில் கட்டி வழிபட்டு வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. இந்த சிற்பம் வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஸ்ரீஜெய புஷ்பவன நாயகி அம்மன் கோயிலின் கருவறைக்கு இடது புறம் இடம் பெற்றுள்ளது. தற்போது கருவறையில் புதிய நிசும்பன்சூதனி சிற்பம் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

பழைய நிசும்பன்சூதனி சிற்பத்தை பத்திரமாக பாதுகாக்கும் பொருட்டு கோயிலின் உள்ளே வைத்து வழிபட்டு வருகிறோம் என்று கோயிலின் பூசாரி வீரையா கூறினார். இவ்வூரில் தொடர்ந்து பழமையான சிற்பங்கள் கிடைத்து வருவதை பார்க்கும்போது வரலாற்றில் வெள்ளிக்குறிச்சி கிராமம் சிறந்து விளங்கி வந்திருக்கலாம். இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Manamadur , Later Pandyan sculpture, Manamadurai, discovery
× RELATED மானாமதுரையில் தெரசாள் ஆலய தேர் பவனி...