×

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை; ஊட்டி-குன்னூர் சாலையை 30 அடி நீளத்திற்கு வெள்ளம் அடித்துச்சென்றது

ஊட்டி: ஊட்டி  சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் ஊட்டி  - குன்னூர் சாலையில் மந்தாடா பகுதியில் 30 அடி நீளத்திற்கு மண்சரிவு  ஏற்பட்டு சாலை மற்றும் தடுப்புச்சுவர் அடித்து செல்லப்பட்டத. நீலகிரி  மாவட்டத்தை மற்ற மாவட்டத்துடன் இணைக்கும் சாலையாக ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை உள்ளது.

இச்சாலையில் கடந்த சில ஆண்டுகளாகவே  தடுப்புச்சுவர் கட்டுதல், கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், ஓரங்களில்  கான்கிரீட் தளம் அமைத்தல் உள்ளிட்ட விரிவாக்க பணிகள் நடைபெற்று  வருகின்றன. இந்த நிலையில் மாண்டஸ் புயல் மற்றும் அரபிக்கடலில் உருவாகியுள்ள  காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு  வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம்  இரவு துவங்கி நேற்று காலை வரை நீலகிரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கூடிய  கனமழை பெய்தது. இந்த மழையால் குன்னூர் சுற்று வட்டார பகுதிகள் வெள்ளக்காடானது. ஊட்டி-குன்னூர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து  ஓடிய நிலையில், மந்தாடா அருகே சுமார் 30 அடி தூரத்திற்கு சாலையில் பிளவு  ஏற்பட்டு மண் இடிந்து விழுந்து மழைநீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால்  வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது.

இப்பகுதிக்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர்  விபத்து ஏற்படுவதை தடுக்கும்  வகையில் தடுப்புகள் ஏற்படுத்தினர். தொடர்ந்து வாகனங்கள் அப்பகுதியில்  மெதுவாக செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தினர். மழை குறைந்தவுடன் உடனடியாக  இப்பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Tags : Ooti-Gunnur , Heavy rain at dawn, Ooty-Coonoor road flooded
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக...