×

 கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ஆவினில் 12 வகை கேக் அறிமுகம்: அமைச்சர் சா.மு.நாசர் விற்பனையை தொடங்கி வைத்தார்

சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, ஆவினில் 12 வகை கேக்குகளை அமைச்சர் சா.மு.நாசர் அறிமுகம் செய்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார். பண்டிகை காலங்களை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஆவின் நிறுவனம் பல புதிய இனிப்பு வகைகள் மற்றும் பால் பொருட்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. தீபாவளி பண்டிகையின்போது ஆவின் சார்பில், இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர் கொண்டாடும் வகையில் சிறப்பு கேக் வகைகளை பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வளசரவாக்கத்தில் உள்ள ஹைடெக் ஆவின் பார்க் பாலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கி வைத்தார்.

இதன்படி, பிளாக் பாரஸ்ட் கேக், சாக்கோ ட்ரிபிள், ஸ்ட்ராபெரி கேக், பைனாப்பிள் கேக், ஒயிட் பாரஸ்ட் கேக், பட்டர்ஸ்காட்ச் கேக், ரெயின்போ கேக், பிளாக்கரண்ட் கேக், ரெட் வெல்வெட் கேக், டெத் பை சாக்லேட் கேக், பிளம் கேக் உள்ளிட்ட 12 வகையான கேக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை 800, 400 மற்றும் 80 கிராம் அளவுகளில் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் ரூ.70 முதல் ரூ.800 வரை கேக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் நாசர் கூறியதாவது: கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஆவின் மூலம் கேக் வகைகள் அறிமுகம் செய்துள்ளோம்.

இந்த கேக்குகள் சுத்தமான முறையில் சுகாதாரமாகவும் விலை குறைவாகவும் பொதுமக்கள் பயன்படுத்துகிற வகையில் லாப நோக்கம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து மக்களும் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் ஆவினில் இனிப்புகள், பால்பொருட்கள், கேக்குகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல்வர் உத்தரவின்படி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தில் உள்ள இளைஞர்களை நல்ல வழியில் அவர் வழிகாட்டியாக இருந்து வழி நடத்தி செல்வார். அமைச்சர் பதவி தாமதமாக அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லேட்டா வந்தாலும் அவர் லேட்டஸ்ட்டாக வந்துள்ளார். அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார்.

ஆர்டர் செய்ய ஆவின் எண்கள்
சென்னை தலைமை அலுவலகம்    7358018395
சென்னை வடக்கு மண்டலம்    9566860286
சென்னை மத்திய மண்டலம்    9790773955
சென்னை தெற்கு மண்டலம்    9444728505
கட்டணமில்லா எண்    18004253300

Tags : Christmas ,New Year ,Minister ,S.M. Nasser , 12 types of cakes introduced in Aavin for Christmas, New Year: Minister HM Nasser launched the sale
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்