×

பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை கண்டறிய பறக்கும் படை: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பறக்கும் படைகள் அமைக்கப் பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2021-22 ஆம் ஆண்டை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பொது இடங்களில் புகைப்பிடித்ததாக ஒரு லட்சத்து 47,319 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தை விட 10 மடங்கு ஆகும். அதேபோல், கேரளத்தில் 73,464, இமாலயப் பிரதேசத்தில் 72,572, மராட்டியத்தில் 28,293, தெலுங்கானாவில் 28,035 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்மாநிலங்களை விட குறைந்த அளவிலேயே தமிழகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாரோ புகைப்பதை சுவாசிப்பதால் எந்தத் தவறும் இழைக்காத பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப் படுவதை அனுமதிக்க முடியாது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற அடிப்படையில், பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை தமிழக அரசு இனி தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பறக்கும் படைகள் அமைக்க வேண்டும். பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை பொதுமக்களே படம் எடுத்து வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பினால், அதனடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முறையையும் காவல்துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : BAMA ,president ,Anbumani , Flying squad to detect smokers in public places: BAMA president Anbumani urges
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...