தமிழகம் முழுவதும் விளையாட்டு ஆணையத்திற்கு 97 பயிற்சியாளர்கள் நியமனம்

மதுரை: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்ற பின் வேகமெடுக்கும் உத்தரவால், தமிழகம் முழுவதும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 97 பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையங்கள் வருகின்றன. அந்த வகையில் சென்னை, மதுரை உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையங்கள் மைதானம் மற்றும் விளையாட்டு விடுதிகளுடன் இயங்கி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது விளையாட்டுத்துறையில் பயிற்சியாளர்கள் உள்பட பல்வேறு நியமனங்கள் கண்டுகொள்ளப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்களே இல்லை. இதனால் பல விளையாட்டுகளில் தமிழ்நாடு அணிகள் தோல்வியையே சந்தித்து வந்தன.

திமுக ஆட்சிக்கு வந்ததும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன் பல முயற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக 97 பயிற்சியாளர்களை நியமிக்க அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து 97 புதிய பயிற்சியாளர்கள் நியமனப்பணிகள் வேகமெடுத்துள்ளன. வில் அம்பு பயிற்சியாளர், தடகளம் (ஸ்பிரின்ட்ஸ்), உயரம் தாவுதல், ஈட்டி எறிதல், பாரா தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, கத்திச்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, ஜூடோ, கபடி, கோகோ, நீச்சல்(டைவிங்), டேக்வாண்டோ, டென்னிஸ் மற்றும் சாப்ட் டென்னிஸ், வாலிபால், பளு தூக்குதல் மற்றும் மல்யுத்த பயிற்சியாளர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட இருப்பதாக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: