×

பெண்ணையாறு விவகாரத்தில் 3 மாதத்தில் புதிய நடுவர் மன்றம்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பெண்ணையாற்றில் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மூன்று மாதத்தில் நடுவர்மன்றம் அமைப்பது தொடர்பான பணியை முடிக்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டது. தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘‘பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் இருமாநில பிரச்னையை தீர்க்கும் விதமாக புதிய நடுவர் மன்றத்தை உருவாக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது விரைவில் பரிசீலிக்கப்பட உள்ளது. அதனால் நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான இறுதி உத்தரவு வரும் வரை பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த பிரச்னையை தீர்க்கும் விதமாக ஒன்றிய அரசு தரப்பில் ஒரு சமரச குழு உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சமரச குழு எடுக்கும் முடிவு என்ன என்பதை தெரிந்து கொண்டு, புதிய நடுவர்மன்றம் அமைப்பது தொடர்பாக விவாதிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன்,‘‘பெண்ணையாறு விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக நான்கு வாரம் கால அவகாசம் வழங்கியும் ஒன்றிய அரசு எதனையும் மேற்கொள்ளவில்லை,’’ என தெரிவித்தார். அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டியா குறுக்கிட்டு,‘‘நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பாயத்தை அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து அதற்கான பணிகளை செய்து வருகிறது. எனவே கூடுதலாக எங்களுக்கு 6 மாதம் அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். ஆனால் ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், மூன்று மாதத்தில் அதுதொடர்பான பணியை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Penanyar ,Supreme Court ,Union Govt. , New jury in Penanyar case in 3 months: Supreme Court orders Union Govt
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...