காவலில் இருந்த கைதி மரணம் சிபிஐ டிஐஜி, எஸ்.பி உட்பட 7 பேர் மீது கொலை வழக்கு: மேற்கு வங்க போலீஸ் அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாது ஷேக் என்பவர் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுய் என்ற இடத்தில் வன்முறை ஏற்பட்டு, 10 பேர் எரித்து கொல்லப்பட்டனர்.  பல வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாலன் ஷேக் என்பவரை கடந்த 4ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து காவலில் வைத்து விசாரித்தனர். அப்போது அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிபிஐ தெரிவித்தது. ஆனால், லாலன் ஷேக்கை சிபிஐ அதிகாரிகள் கொலை செய்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், லாலன் ஷேக்கின் மனைவி ரேஷ்மா பீபி மேற்கு வங்க குற்றவியல் புலனாய்வு துறையில் நேற்று முன்தினம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், சிபிஐ டிஐஜி, எஸ்.பி உட்பட 7 அதிகாரிகள் மீது கொலை உட்பட் 6 பிரிவுகளின் கீழ் மேற்கு வங்க போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் முறையிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சென்குப்தா, ‘மறு உத்தரவு வரும் வரை சிபிஐ அதிகாரிகள் மீது எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். இந்த நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் சிஐடி விசாரணையின் இறுதி அறிக்கை எதையும் சமர்ப்பிக்க கூடாது’ என்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

Related Stories: