சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை இல்லாததால், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாண்டஸ் புயல் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் 10,000 கனஅடி வரை உபரிநீர் திறந்துவிடப்பட்டது. அதேபோல பல்வேறு ஏரிகளில் இருந்தும் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் கனமழை குறைந்ததால், உபரிநீர் திறப்பும் பல்வேறு ஏரிகளில் குறைக்கப்பட்டுள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில்  மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் நேற்றைய நிலவரப்படி  2854 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர், ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் மற்றும் மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக பெறப்படும் நீர் என ஏரிக்கு 4,500  கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 7500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்தை குறைந்ததால் நேற்று காலை 9 மணி அளவில் 7,500 கன அடியிலிருந்து  4,500 கன அடியாக குறைத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அதேபோல புழல் ஏரியில் நேற்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் நேற்றைய நிலவரப்படி 2,745  மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்தாக  611 கன அடி‌யாக உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 287 கன அடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி புழல் நீர் தேக்கத்தில் இருந்து 100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான  1081 மில்லியன் கன அடியில் நேற்றைய நிலவரப்படி 813  மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 1109 கன‌அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 3,228 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு மழை நீர் மற்றும் வரத்துக் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர் என 1924 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 127 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,600 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கண்ணன்கோட்டையில் நேற்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் 500 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: