உலககோப்பை கால்பந்து: 6வது முறையாக பைனலில் அர்ஜென்டினா: மெஸ்ஸி மேஜிக்கில் மயங்கியது குரோஷியா

தோஹா: குரோஷியாவுக்கு எதிரான அரையிறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற அர்ஜென்டினா அணி, 6வது முறையாக உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது. லுசெய்ல் அரங்கில் நடந்த இப்போட்டியில், தொடக்கத்தில் இருந்தே துடிப்புடன் விளையாடிய குரோஷியா வீரர்கள் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நெருக்கடி கொடுத்தனர். பந்து அரிதாக அர்ஜென்டினா வீரர்கள் வசம் சென்றாலும், அவர்கள் உடனடியாக குரோஷியா தரப்புக்கு தாரை வார்த்து களத்தில் அப்படியும் இப்படியுமாக உலவிக் கொண்டிருந்தனர். இதுவும் கூட அர்ஜென்டினா வியூகத்தின் ஒரு அங்கம் என்பதை குரோஷியா புரிந்துகொள்வதற்கு முன்பாகவே, அந்த அணியின் கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய அர்ஜென்டினாவுக்கு 34வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதை சரியாகப் பயன்படுத்தி கேப்டன் மெஸ்ஸி மின்னல் வேகத்தில் கோல் அடிக்க, அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது. இந்த அதிர்ச்சியில் இருந்து குரோஷியா மீள்வதற்கு முன்பாகவே, 39வது நிமிடத்தில் பந்தை லாவகமாகக் கடத்திச் சென்ற ஜூலியன் அல்வாரெஸ் அமர்க்களமாக கோல் போட்டு 2-0 என முன்னிலையை அதிகரித்தார். இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இரண்டாவது பாதியில் இரு அணிகளுமே கோல் முனைப்புடன் தாக்குதலை தீவிரப்படுத்த ஆட்டத்தில் அனல் பறந்தது. குரோஷியா கேப்டன் லூகா மோர்டிச் சளைக்காமல் ஓடி தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்க முயற்சித்தார். குரோஷியா வீரர்கள் அடித்த பல ஷாட்களை அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்டினெஸ் திறமையாக செயல்பட்டு முறியடிக்க, முன்னிலை நீடித்தது.

69வது நிமிடத்தில் குரோஷியா தற்காப்பு வீரர்களுக்கு தண்ணி காட்டிய மெஸ்ஸி, மாயாஜாலம் போல பந்தை கடத்திச் சென்று எதிரணி கோல் பகுதியில் அல்வா போல பாஸ் செய்ய, இளம் வீரர் அல்வாரெஸ் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் வலைக்குள் திணித்து 3-0 என முன்னிலையை மேலும் அதிகரித்தார். கடைசி கட்டத்தில் கோல் அடிக்க குரோஷியா கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்திய அர்ஜென்டினா, 6வது முறையாக உலக கோப்பை பைனலுக்கு தகுதி பெற்றது. கடந்த உலக கோப்பையின் (2018, ரஷ்யா) லீக் சுற்றில் இதே குரோஷியாவிடம் 0-3 என தோற்றிருந்த அர்ஜென்டினா, இம்முறை அரையிறுதியில் அதற்கு பழிதீர்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

* அரையிறுதி ஆட்டம் முடிந்ததும் பேட்டி கொடுத்த மெஸ்ஸி, ‘முதல் லீக் ஆட்டத்தில் தோற்ற பிறகு நாங்கள் பைனலுக்கு முன்னேறுவது இது 5வது முறையாகும். வென்றால் தான் அடுத்தடுத்த வாய்ப்பு என்ற நெருக்கடி, எங்கள் வேலையை சுலபமாக்கி விடுகிறது. இந்த போட்டிக்காக நாங்கள் சிறப்பான முறையில் தயாராகி இருந்தோம். பயிற்சியாளர்களின் பங்களிப்பு இதில் மிக முக்கியமானது. வலுவான எங்கள் அணி எத்தகைய சவாலுக்கும் தயாராக இருக்கிறது. அடுத்த உலக கோப்பைக்கு இன்னும் பல ஆண்டுகள் இருப்பதால், இதுவே எனது கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கும்’ என்றார்.

* தற்போது 5வது முறையாக உலக கோப்பையில் விளையாடி வரும் மெஸ்ஸி, அதிக உலக கோப்பை ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்ற சாதனையை லொதார் மத்தாயுசுடன் (ஜெர்மனி) பகிர்ந்துகொண்டுள்ளார். வரும் ஞாயிறன்று பைனலில் களமிறங்கினால் (26வது உலக கோப்பை ஆட்டம்) அவர் முதலிடத்துக்கு முன்னேறுவார்.

* 18 உலக கோப்பை ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளதும் புதிய சாதனையாக அமைந்துள்ளது. ரபா மார்குவஸ் (17), டீகோ மரடோனா (16) அடுத்த இடங்களுக்கு பின்தங்கியுள்ளனர்.

* இத்தாலியின் பாவ்லோ மால்டினி உலக கோப்பையில் 2,217 நிமிடங்களுக்கு விளையாடியதே அதிகபட்சமாக உள்ளது. அந்த சாதனையையும் பைனலில் விளையாடுவதன் மூலமாக மெஸ்ஸி (2,194 நிமிடம்) முறியடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

* 5 உலக கோப்பையில் கோல் அடிக்க உதவிய (அசிஸ்ட்) ஒரே வீரர் என்ற பெருமையும் மெஸ்ஸிக்கு கிடைத்துள்ளது.

* உலக கோப்பையில் அதிக கோல் அடித்த அர்ஜென்டினா வீரர் என்ற சாதனையையும் மெஸ்ஸி (11) நிகழ்த்தியுள்ளார். பாடிஸ்டுடா (10), மரடோனா (8), கில்லர்மோ ஸ்டேபில் (8), மரியோ கெம்பெஸ் (6), ஹிகுவைன் (5) அடுத்த இடங்களில் உள்ளனர்.

Related Stories: