×

அருணாச்சல் மோதல் விவாரம்; இரு தரப்பும் விலகியது மகிழ்ச்சி!: ஐ.நா, அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்: அருணாச்சல் பிரதேச மோதல் விவகாரம் தொடர்பாக இந்தியாவும், சீனாவும் மேலும் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்று ஐ.நா பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல் அமெரிக்காவும் கருத்து தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் கடந்த சில நாட்களுக்கு முன், இந்திய - சீன வீரர்கள் மோதிக் கொண்டதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில், ‘அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாரின் யாங்சே பகுதியில் உள்ள அசல் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்.ஏ.சி) நடந்த மோதல் சம்பவத்தை கவனித்தோம். இருதரப்பும் மேலும் பதற்றங்களை அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’ என்றார்.

முன்னதாக பீஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ‘இந்திய - சீன எல்லை தொடர்பான பிரச்னைகள் குறித்து இரு தரப்பிலும் ராஜதந்திர மற்றும் ராணுவ ரீதியில் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது’ என்றார்.

அதேபோல் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கேரின் ஜீன்-பியர் கூறுகையில், ‘இந்திய - சீன எல்லை மோதல் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சர்ச்சைக்குரிய எல்லைகள் பிரச்னை குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்துவதை அமெரிக்கா ஊக்குவிக்கும். இரு தரப்பு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இருதரப்பும் விரைவாக விலகி சென்றதில் மகிழ்ச்சியடைகிறோம்’ என்றார்.

வேவு பார்க்கும் சீன உளவுக் கப்பல்: கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் சீனாவின் உளவுக் கப்பல் ‘யுவாங் வாங்  -5’  நுழைந்தது. ஆனால் இந்த கப்பல் தற்போது  அங்கிருந்து வெளியேறிவிட்டதாக இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.  

இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவாங் வாங் -5’  என்ற கப்பல், இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்தது. அந்த கப்பலில்  பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு உபகரணங்கள்  இருந்தன. இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அந்தக் கப்பல்  நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கப்பலை ெதாலை தூர கண்காணிப்பு ட்ரோன்கள், கடல்  ரோந்து விமானங்கள் மூலம் உன்னிப்பாக  கண்காணித்து வந்தோம். தற்போது அந்த கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில்  இருந்து வௌியேறிவிட்டது’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.

Tags : Arunachal conflict details; Glad Both Sides Quit!: UN, US Opinion
× RELATED அனைத்திலும் சந்தேகத்துக்குரிய...