நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை; பவானிசாகர் அணை நீர்மட்டம் 104.50 அடியை தொட்டது: பவானி ஆற்றில் 500 கனஅடி உபரிநீர் திறப்பு

சத்தியமங்கலம்: நீர்மட்டம் 104.50 அடியை எட்டியதால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது. இதனால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கும், பவானி ஆற்றுப்பாசனத்திற்கும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கரை உடைப்பு ஏற்பட்டதால் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட ஆயிரம் கன அடி தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து 2,322 கன அடியாக உள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம், முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

இதைத்தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணை நீர்மட்டம் 104.50 அடியை எட்டியவுடன் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும் என நேற்று முன்தினம் நீர்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் நேற்று இரவு அணை நீர்மட்டம் 104.50 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து, பவானி ஆற்றில் முதற்கட்டமாக 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து உபரிநீர் திறப்பின் அளவு அவ்வப்போது மாறுபடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: