ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு இளம்பெண்ணை பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் மிரட்டி, கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தும், சந்தேகிக்கும் மர்ம நபர்களின் படங்களை காட்டுவதில் போலீசாரை குழப்பி வருகிறார். இதனால் அப்பெண்ணுடன் தங்கியுள்ள 4 பெண்கள் உள்பட பலரிடம் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை, சுங்குவார்சத்திரம், ஒரகடம், மாம்பாக்கம், வல்லம், வடகால் பகுதிகளில் சிப்காட் தொழில் பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்-பெண்கள், மேற்கண்ட பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவலன் செயலியில் ஒரு இளம்பெண் புகார் அளித்திருந்தார். அப்புகாரில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த இளம்பெண், ஸ்ரீரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்துள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் 2 மர்ம நபர்கள், போலீஸ்ரீ எனக் கூறி கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். மேலும், ஸ்ரீரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர் நகரில் இருந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, வடமங்கலம் பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் வேலை முடிந்து, தனது காதலருடன் அங்குள்ள காட்டு பகுதியில் உல்லாசமாக இருந்துவிட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இதை நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது காதலரும் உல்லாசமாக இருந்ததை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
பின்னர் அப்பெண்ணை பைக்கில் 2 மர்ம நபர்களும் பின்தொடர்ந்து வந்தனர். அப்பெண்ணிடம் செல்போனில் பதிவு செய்து வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டி, அப்பெண்ணை தங்களுடன் பைக்கில் 2 மர்ம நபர்களும் அழைத்து சென்றனர். பின்னர் அதே காட்டு பகுதியில் அப்பெண்ணை 2 மர்ம நபர்களும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர் என தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த வாலிபரை நேற்றிரவு போலீசார் விடுவித்தனர். பின்னர், அப்பெண்ணிடம் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபர்களின் புகைப்படங்களை காட்டி, அடையாளம் காட்டும்படி கூறியுள்ளனர். எனினும், அப்பெண் போலீசாரிடம் புகைப்படங்களை அடையாளம் காட்டுவதில் குழப்பத்தை ஏற்படுத்தினார். மேலும், போலீசாரின் கேள்விகளுக்கு அப்பெண் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.
இதனால் அப்பெண்ணுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்த 4 பெண்கள் உள்பட பலரிடம் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், அப்பெண்ணின் காதலர் உள்பட கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களையும் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
