×

 ‘மாண்டஸ்’ புயல் சேதம் கணக்கெடுப்பு பயிர்கள் 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டு இருந்தால் நிவாரணம் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: ‘மாண்டஸ்’ புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி 33  சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார். வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சென்னை, கிண்டி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை அலுவலக கூட்ட அரங்கில், விற்பனை குழுவில் பணியாற்றி, பணிக்காலத்தின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவரவர் தம் தகுதிக்கேற்ப 14 பேருக்கு கருணை அடிப்படையில் பணி  நியமன ஆணைகளை நேற்று வழங்கினார். இதை தொடர்ந்து, ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையின் செயல்பாடுகள் தொடர்பாக விற்பனை குழு செயலாளர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: விளை பொருட்களை சேமித்து வைத்து உயர்ந்த விலை கிடைக்கும் காலங்களில் விற்பனை செய்திட ஏதுவாக மாநிலம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 510 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இவற்றின் மூலம் 3.75 லட்சம் மெட்ரிக் டன் விளை பொருட்களை சேமித்து வைக்கலாம். 2022, நவம்பர் வரை 17.66 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
 பொருளீட்டு கடனாக விவசாயிகளுக்கு ரூ.13.38 கோடியும், வணிகர்களுக்கு ரூ.2.84 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

சந்தை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் 63 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 64 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது. ‘மாண்டஸ்’ புயலினால் திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய வடமாவட்டங்களில் பயிர்கள் நீரினால் சூழப்பட்டுள்ளது. தண்ணீர் வடிந்த பிறகு உரிய கணக்கெடுப்புகள் நடத்தி 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்புக்குள்ளான பயிர்களுக்கு முதல்வர் ஆலோசனையை பெற்று நிவாரணம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 


Tags : Mandus ,Minister ,MRK ,Panneerselvam , 'Mandus' storm damage survey if crops are affected more than 33 percent relief: Minister MRK Panneerselvam Information
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...