×

சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12.26 கோடியில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

சென்னை: சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12.26 கோடியில் ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆவின் நிறுவனம், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் கிராம அளவில் 9367 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 30 லட்சம் லிட்டர் பாலை நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் பால் கொள்முதலில் தமிழ்நாடு 3வது இடத்தைப் பெற்றுள்ளது.

ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் உப பொருட்களான நெய், பால்பவுடர், பனீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், லஸ்ஸி, யோகர்ட், நறுமணப் பால் வகைகள், இனிப்புகள், ஐஸ்கிரீம், குல்பி, சாக்லேட் மற்றும் குக்கீஸ் வகைகளை நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது. அந்த வகையில் வளர்ந்து வரும் ஐஸ்கிரீம் சந்தையில் ஆவின் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதமாகவும், கூடுதல் லாபம் ஈட்டி பால் உற்பத்தியாளர்களின் நலன் காக்கவும், சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12.26 கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 6,000 லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், துறை செயலாளர்  கார்த்திக், ஆவின் மேலாண்மை இயக்குநர் சுப்பையன், ஆவின் இணை இயக்குநர் சரயு  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Ice Cream Factory ,Salem Dairy Complex ,Chief Minister ,M.K.Stalin , Rs 12.26 Crore Ice Cream Factory at Salem Dairy Complex: Chief Minister M K Stalin inaugurated
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...