2022 கத்தார் உலக கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியன் பிரான்சை தடுத்து நிறுத்துமா மொராக்கோ? 2வது அரையிறுதியில் இன்று பலப்பரீட்சை

தோஹா: உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் 2வது அரையிறுதியில், நடப்பு சாம்பியன் பிரான்ஸ் - மொராக்கோ அணிகள் இன்று நள்ளிரவு மோதுகின்றன. கத்தார் உலக கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் பிரான்ஸ் - மொராக்கோ அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா - குரோஷியா அணிகள் மோதிய நிலையில், இன்று நள்ளிரவு 12.30க்கு தொடங்க உள்ள 2வது அரையிறுதில் இந்த அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவை 4-1, டென்மார்க் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ், கடைசி லீக் ஆட்டத்தில் துனிசியாவிடம் 0-1 என அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. எனினும், ரவுண்ட் ஆப் 16ல் போலந்து அணியை 3-1 என போட்டுத் தாக்கிய அந்த அணி, காலிறுதியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. எம்பாப்பே, கிரவுடு, கிளின்ஸ்மேன், ஆரெலியன் உள்ளிட்ட பிரான்ஸ் வீரர்களின் துடிப்பான ஆட்டம், அந்த அணி பைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளது.

அதே சமயம், நடப்பு தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் அரையிறுதிக்குள் நுழைந்துள்ள மொராக்கோ அணி, நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சி அளிக்கும் முனைப்புடன் வரிந்துகட்டுகிறது. முதல் லீக் ஆட்டத்தில் குரோஷியாவுடன் 0-0 என டிரா செய்த அந்த அணி... தொடர்ச்சியாக பெல்ஜியம் (2-0), கனடா (2-1), ஸ்பெயின் (3-0), போர்ச்சுகல் (1-0) அணிகளை வீழ்த்தி அரையிறுதியில் கால் வைத்துள்ளது. மொராக்கோ 5 போட்டியில் ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது, அதுவும் கூட ‘ஓன் கோல்’ என்பது... அந்த அணியின் தற்காப்பு அரண் பலத்துக்கு சான்றாக உள்ளது. இரு அணிகளுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் உள்ளதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Related Stories: