×

நிர்பயா நிதியின் கீழ் சென்னை பள்ளிகளில் 6- 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா

சென்னை: நிர்பயா நிதியின் கீழ் சென்னைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா இன்று ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

முதலமைச்சரின் உத்தரவின்படி, சென்னைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையில், நிர்பயா நிதியின் கீழ் பெண் குழந்தைகளின் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.4.67 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும்  மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் இன்று (13.12.2022) தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் சென்னைப் பள்ளிகளில் பயிலும் 25,474 மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டமானது எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய  மண்டலங்களில் செயல்படுத்தப்படும். சென்னைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஒரு மாதத்திற்கு 10 சானிட்டரி நாப்கின்கள் என்ற அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 20 சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்.

மேலும், மாணவிகளின் பள்ளிகளில் அவசரத் தேவைகளுக்காக கூடுதலாக ஒவ்வொரு மாதமும் 50 சானிட்டரி நாப்கின்கள் என்ற முறையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 100 சானிட்டரி நாப்கின்கள் தனி அலமாரிகளில் வைக்கப்படும். ஒரு வருடத்திற்கு 26.59 லட்சம் சானிட்டரின் நாப்கின்கள் சென்னைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, துணை ஆணையாளர் (கல்வி) டி.சினேகா, கல்வி அலுவலர், உதவி கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mayor ,Priya ,Chennai , Mayor Priya launched a scheme to provide sanitary napkins to girls studying in classes 6-12 in Chennai schools under the Nirbhaya Fund.
× RELATED ரத்னம் விமர்சனம்