×

மொராக்கோவை குறைவாக மதிப்பிட மாட்டோம்: பிரான்சின் தடுப்பாட்ட வீரர் ரஃபேல் வரானே பேட்டி

அல்கோர்: மொராக்கோ அணியை குறைவாக மதிப்பிட மாட்டோம் என பிரான்ஸ் வீரர் ரஃபேல் வரானே தெரிவித்துள்ளார். கத்தாரின் அல்கோர் நகரில் உள்ள அல் பைட் ஸ்டேடியத்தில் நாளை நள்ளிரவில் உலகக்கோப்பை கால்பந்து 2வது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை எதிர்த்து மொராக்கோ அணி மோதவுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் மொராக்கோ அணி, முதன் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இரு அணியின் வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் உள்ளனர். பிரான்ஸ் அணியில் முன்கள வீரர்களுக்கு இணையாக தடுப்பாட்ட வீரர்களும் இந்த தொடரில் ஜொலிக்கின்றனர். சென்டர் பேக் நிலையில் ஆடும் ரஃபேல் வரானே, ரைட் பேக் நிலையில் ஆடும் ஜூல்ஸ் கவுண்டே மற்றும் உபமெகானோ ஆகியோரை தாண்டி பந்தை கோல் போஸ்ட்டுக்கு கொண்டு செல்வது சவாலான விஷயம்தான் என்று இதுவரை பிரான்சுடன் மோதிய அணியின் பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய பயிற்சிக்கு பின்னர் பிரான்சின் தடுப்பாட்ட வீரர் (சென்டர் பேக்) ரஃபேல் வரானே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாளைய போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. முதன் முறையாக மொராக்கோ அணி உலகக்கோப்பை அரையிறுதியில் ஆடவுள்ளது. நாங்கள் அந்த அணியை குறைவாக மதிப்பிட மாட்டோம். ஏனெனில் அந்த அணி, ஏதோ அதிர்ஷ்டத்தினால் செமி பைனலுக்கு வரவில்லை. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் போன்ற வலுவான அணிகளை, வீழ்த்தி விட்டே செமி பைனலுக்கு வந்துள்ளது. கால்பந்து உலகக்கோப்பையில் செமி பைனல் வரை வருவது எளிதல்ல. அதுவே ஒரு சாதனைதான். ஆனால் நாங்கள் அத்துடன் திருப்திபட்டுக் கொள்ள முடியாது. எங்களது ஒரே இலக்கு பைனலில் ஆட வேண்டும். கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான். அதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வீரரும் தங்களிடம் உள்ள மிகச் சிறந்த விளையாட்டு திறனை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது என்பதை உணர்ந்துள்ளோம். எதிரணியை குறைத்து மதிப்பிடும் தவறை செய்யவே மாட்டோம். ஏனெனில் அதீத நம்பிக்கை என்பது, நமக்கே நாம் வைத்துக் கொள்ளும் பொறி. அதில் சிக்கிக் கொள்ளக் கூடாது. காயம் காரணமாக கரீம் பென்சேமா எங்களுடன் ஆடவில்லை.

 ஆனாலும் அவருடன் நான் தொடர்பிலேயே இருக்கிறேன். எங்களுக்கு அவர் ஊக்கமளித்துக் கொண்டே இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார். அணியின் மற்றொரு தடுப்பாட்ட வீரர் ஜூல்ஸ் கவுண்டே கூறுகையில், ‘‘லீக் சுற்றில் மொராக்கோ அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. வலுவான பெல்ஜியம் அணியை வீழ்த்தியுள்ளது. குரோஷியாவுக்கு எதிரான போட்டியை டிரா செய்துள்ளது. தவிர அந்த அணியின் வீரர்கள் அனைவரும் மிக வேகமாக ஓடுகிறார்கள். வேகமாக ஓடுவது அவர்களுக்கு இயல்பாக இருக்கிறது. அவர்களுக்கு இணையாக நாங்களும் வேகமாக ஓட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.



Tags : Morocco ,France ,Raphael Varane , Morocco, don't judge, Raphael Varane, interview
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...