×

திருப்பதியில் இருந்து பஸ்சில் சென்றபோது ஏற்பட்ட பழக்கம் பக்தருக்கு மயக்க மருந்து பிரசாதம் கொடுத்து ரூ.6 லட்சம் நகைகளை திருடிய இளம்பெண்: லாட்ஜ்ஜுக்கு அழைத்து சென்று துணிகரம்

திருமலை: திருப்பதியில் இருந்து காளஹஸ்தி கோயிலுக்கு பஸ்சில் சென்ற பக்தரிடம் பழகிய இளம்பெண் காளஹஸ்தியில் லாட்ஜுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மயக்க மருந்து கலந்த லட்டு பிரசாதம் கொடுத்து6 லட்சம் மதிப்புள்ள நகைகளை சுருட்டி கொண்டு தப்பினார்.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னர் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலுக்கு சென்றார். இதற்காக திருப்பதியில் இருந்து காளஹஸ்தி செல்லும் பஸ்சில் பயணம் செய்தார். பஸ்சில் அவருக்கு அருகில் ஒரு இளம்பெண்ணும் அமர்ந்திந்தார்.

பஸ் சிறிது தூரம் சென்ற நிலையில் இளம்பெண், அந்த பக்தரிடம் நைசாக பேச்சு கொடுத்தார். நீண்ட நேரமாக இருவரும் தங்களது குடும்ப விஷயங்களை பேசி கொண்டே சென்றனர். காளஹஸ்தி சென்றதும் இருவரும் இறங்கினர். அப்போது அந்த இளம்பெண், லாட்ஜ்க்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு கோயிலுக்கு செல்லலாம் என கூறியுள்ளார். அவரும் சம்மதித்துள்ளார். ஒரு லாட்ஜ்ஜுக்கு சென்று அறை எடுத்து தங்கினர். அப்போது அந்த இளம்பெண், ‘திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் இருக்கிறது, சாப்பிடுகிறீர்களா’ என கேட்டு அவரிடம் கொடுத்துள்ளார். உடனே அவரும் மறுக்காமல் வாங்கி சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

நீண்ட நேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பக்தர் பார்த்தபோது, தான் அணிந்திருந்த6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை காணவில்லை. பெண்ணையும் காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போதுதான் மயக்க மருந்து கலந்து லட்டு கொடுத்து நகை, பணத்துடன் இளம்பெண் தப்பியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பக்தர், காளஹஸ்தி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட லாட்ஜூல் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த இளம்பெண் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.



Tags : Tirupathi , The habit of taking a bus from Tirupati to a devotee after giving anesthetic prasad to a young woman who stole Rs 6 lakh jewellery: a venture by taking her to a lodge
× RELATED திருப்பதி மாவட்டத்தில் மத்திய...