திருமங்கலம் அருகே சாலை அகலப்படுத்தும் பணிக்காக மரக்கிளைகள் ‘கட்’

*நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை

திருமங்கலம் : திருமங்கலத்தை அடுத்த பன்னீர்குண்டு கிராமத்திலிருந்து தங்களாசேரி வரையில் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக சாலையோரத்தில் இருக்கும் மரக்கிளைகளை அகற்றும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் துவக்கியுள்ளனர்.திருமங்கலத்திலிருந்து தங்களாசேரி வழியாக சேடபட்டி வரையில் நெடுஞ்சாலை செல்கிறது. சாத்தங்குடி, பன்னீர்குண்டு, அம்மாபட்டி, தங்களாசேரி வழியாக செல்லும் இந்த சாலையில் பன்னீர்குண்டு முதல் தங்களாசேரி வரையில் சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. மேலும் சாலையின் இருபுறத்திலும் ஏராளமான புளியமரங்கள் உள்ளன. இவற்றின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று இணையும் வகையில் சாலையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள நிலையில் காணப்படுகின்றன.

இதனால் இந்த சாலை எப்போதும் நிழலாகவே காணப்படும். இருப்பினும் திருமங்கலத்திலிருந்து தங்களாசேரி, சென்னம்பட்டி மற்றும் சேடபட்டிக்கு செல்லும் டவுன் பஸ்கள் பன்னீர்குண்டு, தங்களாசேரி கிராமத்தின் இடையே செல்லும்போது மரக்கிளைகளால் பெரிதும் இடையூறு ஏற்பட்டு வந்தது. அகலம் குறைவான சாலை என்பதால் எதிரே வாகனம் வந்தால் பஸ்சினை சாலையோரம் ஒதுக்கும் போது மரக்கிளையால் பஸ்கள் சேதமடைந்தன.

மேலும் டவுன் பஸ்களின் மேல்புறம் மழைக்கு ஒழுகாமல் இருக்க போடப்படும் தார்பாய்களை கிளைகள் சேதப்படுத்தி வந்ததால் இந்த வழியாக இயக்கப்படும் டவுன் பஸ்கள் அடிக்கடி பழுதாகி வந்தன.இதே போல் ஒரே நேரத்தில் எதிர்எதிர் வாகனங்கள் செல்லமுடியாத நிலையும் இருந்து வந்தது. இதனால் பன்னீர்குண்டு தங்களாசேரி சாலையை அகலப்படுத்த வேண்டும் என இந்த பகுதி மக்கள் மற்றும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் தற்போது பன்னீர்குண்டு முதல் தங்களாசேரி வரையிலான 5 கி.மீ தூரத்திற்கான 12 அடி சாலையை 16 அடியாக அகலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதன் முதல்கட்டமாக சாலையோரத்தில் உள்ள புளியமரங்களின் கிளைகள் மட்டும் அகற்றப்பட்டு வருகின்றன. தற்போது பன்னீர்குண்டு அடுத்துள்ள அம்மாபட்டி விலக்கு பகுதியிலிருந்து தங்களாசேரி கிராமம் செல்லும் வழியில் இந்த பணிகள் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகின்றன. தங்களாசேரி வரையில் சாலையோரத்தில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றிய பின்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணிகளை துவக்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: