×

வேலூர்- ஆற்காடு சாலையில் வாகனங்களை நிறுத்தும் செக்யூரிட்டிகள் தனியார் மருத்துவமனையில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேறும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல்

* தினமும் அவதிப்படும் பொதுமக்கள் * மாற்றுப்பாதையில் இயக்க கோரிக்கை

வேலூர் : வேலூர் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள ஆற்காடு சாலை பிரபல தனியார் மருத்துவமனையை ஒட்டி செல்கிறது. இம்மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், அவர்களை சார்ந்தவர்களுக்காக ஆற்காடு சாலையில் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள காந்தி ரோடு, மெயின் பஜார், சுக்கையவாத்தியார் தெரு, லத்தீப்பாட்சா தெரு, மிட்டா ஆனந்தராவ் தெரு, பாபுராவ் தெரு, பேரி பக்காளி தெரு, பேரி சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை பிடிசி ரோடு மற்றும் அதன் அருகில் உள்ள தெருக்களில் லாட்ஜ்களும், விடுதிகளும், கடைகளும், வர்த்தக நிறுவனங்களும், ஓட்டல்களும் நிரம்பியுள்ளன.

இதனால் இந்த பகுதிகள் எப்போதுமே மக்கள் நெரிசலுடன், வாகன நெரிசலும் மிகுந்து காணப்படும். குறிப்பாக ஆற்காடு சாலையில் காலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரை போக்குவரத்து நெரிசல் என்பது மக்களையும், வாகன ஓட்டிகளையும் எரிச்சலடையும் வைக்கும் வகையிலேயே இருக்கும். இந்த நெரிசலுக்கு பிரதான காரணம் ஆக்கிரமிப்புகளே என்கின்றனர் பொதுமக்கள்.

ஆற்காடு சாலையை பொறுத்தவரை அதன் பழைய வரைபடத்தை வைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினால் இருபுறமும் சுமார் 20 முதல் 30 அடி வரை தாராளமாக இடம் கிடைக்கும். தற்போதைய நிலையில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தங்களின் இடத்தை தாண்டி ஆக்கிரமித்துள்ளன. அதற்கு மேல் நடைபாதை கடைகள் வேறு சாலையின் இருபுறமும் நிறைந்துள்ளது. இதனால் 20 முதல் 25 அடியாக சுருங்கிப்போன சாலையில் வாகன ஓட்டிகள் செல்லவும், பொதுமக்கள் நடமாடவும் வேண்டய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையின் புதிய கிளை ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கத்தில் அமைந்துள்ளது. இதனால் ஆற்காடு சாலையில் உள்ள மருத்துவமனையில் நாள்தோறும் 5க்கும் மேற்பட்ட பஸ்களில் நோயாளிகளை அழைத்து செல்கின்றனர். இதற்காக ஆற்காடு சாலையில் ஒரே நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் இருந்து 5 பஸ்கள் வெளியே வருகிறது.
அப்போது, அவ்வழியாக வரும் வாகனங்களை அங்கு பணியில் இருக்கும் செக்யூரிட்டிகள் நிறுத்தி விடுகின்றனர். இதனால் ஆற்காடு சாலையில், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். போலீசார் இதனை கண்டுகொள்வதே இல்லை.

மேலும், வேலூர் காகிதப்பட்டறையில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே தனியார் மருத்துவமனையில் இருந்து ஆற்காடு சாலையில் இருந்து பஸ்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு, காட்பாடி சாலை வழியாக வெளியே சென்று, மக்கான் சந்திப்பு, பழைய பைபாஸ் சாலை வழியாக கிரீன் சர்க்கிள் வழியாக சர்வீஸ் சாலையில் சென்றால், ஆற்காடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vellur-Arkadu road , Vellore: Located in the middle of Vellore city, Arcot road runs along a famous private hospital. Daily to this hospital
× RELATED வேலூர்-ஆற்காடு சாலையின் இருபுறமும்...