விருதுநகர்: விபத்தில்லா பட்டாசு தொழிலை உருவாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், ஆமத்தூரில் உள்ள ஏஏஏ கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், பட்டாசு தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் அதிக பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. சுமார் 56 ஆயிரம் பட்டாசுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். பட்டாசு ஆலைகளில் விபத்துகளை தடுக்கவும், தொழிலாளர்களை காப்பாற்றவும் சிவகாசியில் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி ரூ.150 கோடியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. விபத்தில்லா தமிழகம் மற்றும் விபத்தில்லா பட்டாசு தொழில்களை உருவாக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தோடு முதல்வர் சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இதன் விளைவாக இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு, 35,961 தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக பணிபுரிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 800 பட்டாசு ஆலைகளில் இதுவரை ஒரு விபத்து கூட ஏற்படவில்லை. இந்த கருத்தரங்கை நல்ல முறையில் பயன்படுத்தி, பட்டாசு விபத்தை தடுப்பதற்கு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், உறுதுணையாக இருந்து விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.