×

உலக கோப்பை கால்பந்து: முதல் அரை இறுதியில் அர்ஜென்டினா-குரோஷியா இன்று பலப்பரீட்சை

தோஹா: உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல்  அரையிறுதியில்  அர்ஜென்டினா - குரோஷியா அணிகள் இன்று மோதுகின்றன. கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்றுடன் 16 அணிகள் வெளியேறிய நிலையில், ‘ரவுண்டு ஆப் 16’ மற்றும் காலிறுதியுடன் பிரேசில், போர்ச்சுகல், இங்கிலாந்து, நெதர்லாந்து உள்பட பல முன்னணி அணிகள் வெளியேறிவிட்டன.

நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா,  முதல் முறை சாம்பியன் கனவில் குரோஷியா, மொராக்கோ அணிகள்  அரையிறுதியில் களம் காண உள்ளன. இன்று நள்ளிரவு நடைபெற உள்ள முதல் அரையிறுதியில்  2 முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா (3வது ரேங்க்), கடந்த முறை 2வது இடம் பிடித்த குரோஷியாவுடன் (12வது ரேங்க்)  மோதுகிறது. அர்ஜென்டினா அணியில் கேப்டன் மெஸ்ஸி, டைபாலா, ஏமிலியனோ மார்டினெஸ், அல்வாரெஸ்,  டி மரியா என ஏராளமான நட்சத்திர வீரர்கள் உள்ளனர். அவர்கள் உலகின் முன்னணி கிளப்களுக்காக விளையாடும் வீரர்கள் என்பதால்  பலமான அணியாகவும் அர்ஜென்டினா திகழ்கிறது.

ஆனாலும், நடப்ப்உ தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் அந்த அணி சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்ததை மறப்பதற்கில்லை. அந்த முதல் தோல்வியில் இருந்து மீண்டுதான் இன்று அரையிறுதி வரை முன்னேறி உள்ளனர். அதே நேரத்தில் குரோஷியாவையும் குறைத்து மதிப்பிட முடியாது. லூகா மோட்ரிச்  தலைமையிலான குரோஷியா அணி லீக் சுற்றில்  இருந்தே தோல்வியை சந்திக்காத அணியாக உள்ளது. கூடவே திறமையான கோல் கீப்பர் டொமினிக் , லாவ்ரோ, மார்க்கோ, ஆண்ட்ரேஜ், டைசென், நிகாலோ விளாசிச், மரியோ என குரோஷிய அணியிலும் நட்சத்திர வீரர்கள் அணிவகுக்கின்றனர். எனவே, பலமான 2 அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது.

Tags : World Cup ,Argentina ,Croatia , World Cup Football: Argentina-Croatia in the first semi-final is a test today
× RELATED சில்லி பாயின்ட்…