வீட்டின் பாதாள அறையில் பதுக்கி வைத்திருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட 7 சிலைகள் மீட்பு: பெண் தொழிலதிபர் சிக்கினார்; தீனதயாளனிடம் வாங்கியது அம்பலம்

சென்னை: உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருடப்பட்டு, சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் வாங்கிய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட 7 சிலைகள் பெண் தொழிலதிபர் ஒருவர் வீட்டின் பாதாள அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறை சார்பில் பழங்கால சிலைகளை பதிவு செய்த நபர்களிடம் பட்டியலை பெற்று ஆய்வு செய்தபோது சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொழிலதிபர் ஷோபா துரைராஜன் என்பவர் வீட்டில் மிகவும் பழமையான சிலைகள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சென்னை ஆர்.ஏ.புரம் 7வது பிரதான சாலையில் உள்ள பெண் தொழிலதிபர் ஷோபா துரைராஜன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது 7 பழங்கால சிலைகள் வீட்டின் பாதாள அறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலைகள் குறித்து பெண் தொழிலதிபரிடம் விசாரணை நடத்தியபோது கடந்த 2008 மற்றும் 2015ம் ஆண்டுகளில் பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் நடத்திய அபர்ணா ஆர்ட் கேலரியில் இருந்து வாங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதில் குறிப்பாக உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 3 சிலைகள் இருப்பதும் தெரியவந்தது. உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், உளுந்தூர்பேட்டையில் உள்ள கோயிலில் நேரடியாக விசாரணை நடத்தியபோது கடந்த 10.7.2011ம் ஆண்டு இரவு காணாமல் போன ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் என்பது உறுதியானது. இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பின்னர் சிலைகள் கண்டறியப்படாத வழக்காக முடித்து வைக்கப்பட்டதும் தெரியவந்தது.

இந்த கோயில் சிலைகளை பெண் தொழிலதிபர் ஷோபா துரைராஜன், இந்திய தொல்லியல் ஆய்வகத்தில் பதிவு செய்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து வாங்கப்பட்டதால், பெண் தொழிலதிபரிடம் இருந்து உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 3 சிலைகள் மற்றும் அஸ்திர தேவர், அம்மன், வீரபத்ரா, மகாதேவி உள்ளிட்ட 7 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிலைகளில் 4 சிலைகள் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உளுந்தூர்பேட்டை கோயிலில் இருந்து திருடப்பட்ட ஆதிகேசவப் பெருமாள், தேவி, பூதேவி ஆகிய 3 சிலைகள் விசாரணை முடிவில் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று சிலை கட்டத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்து உள்ளனர்.

Related Stories: