இரண்டாவது முறையாக குஜராத் முதல்வரானார் பூபேந்திர படேல்: 16 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்

காந்திநகர்: பிரதமர் மோடி முன்னிலையில் குஜராத் முதல்வராக 2வது முறையாக பூபேந்திர படேல் பதவியேற்றார். அவருடன் 16 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜ 156 இடங்களை கைப்பற்றி இதுவரையில்லாத வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. மேலும், தொடர்ந்து 7வது முறையாக ஆட்சியை பிடித்து அசத்தியது. அங்கு, 1995ல் தொடங்கிய பாஜவின் வெற்றி இன்று வரை தொடர்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும், சமாஜ்வாடி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து, முதல்வர் பூபேந்திர படேல், புதிய அரசு அமைப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை தனது முழு அமைச்சரவையுடன் பதவியை ராஜினாமா செய்தது.

இதையடுத்து நடந்த பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சி சட்டப்பேரவை தலைவராக பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதற்கு ஆளுநர் ஆச்சர்ய தேவ்ரத் அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து, காந்திநகரில் புதிய தலைமைச் செயலகம் அருகே ஹெலிபேட் மைதானத்தில் பதவியேற்பு விழா நேற்று மதியம் நடந்தது. விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில பாஜ முதல்வர்கள் யோகி ஆதித்யநாத் (உத்தரப்பிரதேசம்), ஏக்நாத் ஷிண்டே (மகாராஷ்டிரா), மனோகர் லால் கட்டார் (அரியானா), ஹிமந்தா பிஸ்வா சர்மா (அசாம்), பசவராஜ் பொம்மை (கர்நாடகா), பிரமோத் சாவந்த் (கோவா), சிவராஜ் சிங் சவுகான் (மபி), பெமா கண்டு (அருணாச்சல்) ஆகியோரும், ஒன்றிய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ராம்தாஸ் அத்வாலே, சர்பானந்தா சோனாவால் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், பிரதமர் மோடி முன்னிலையில் குஜராத்தின் 18வது முதல்வராக தொடர்ந்து 2வது முறையாக பூபேந்திர படேல் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பூபேந்திர படேலுடன் 16 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில், 11 பேர் முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் ஆவர். 8 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 3 பேர் இணை அமைச்சர்களாகவும் (தனிப்பொறுப்பு) பதவியேற்றனர். முதல்வராக பொறுப்பேற்ற பூபேந்திர படேல் மற்றும் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: