×

மேட்டுப்பாளையம் அருகே நிறைமாத கர்ப்பிணியை 3 கிமீ தூரம் தொட்டில் கட்டி தூக்கிவந்த மக்கள்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பழங்குடியின பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டதால் துணியில் தொட்டில் கட்டி 3 கி.மீ. தூரம் கிராம மக்கள் தூக்கி வந்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அடுத்துள்ளது புதூர் ஊராட்சி. இங்குள்ள மண்ணா மலைக்கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் நகருக்கு வரவேண்டுமானால் பவானி ஆற்றை தொங்குபாலம் மூலம் கடந்து வர வேண்டும். அதன்பின், சுமார் 3 கிமீ தூரம் அடர்ந்த வனப்பகுதியை கடக்க வேண்டும். இந்த பகுதியை சேர்ந்தவர் சுமதி. கர்ப்பிணியான இவருக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியிருந்தனர். ஆனால், நேற்று முன்தினம் நள்ளிரவு சுமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து, உறவினர்கள் துணியால் தொட்டில் கட்டி சுமதியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி, தொட்டில் மூலம் பவானி ஆற்று தொங்குபாலத்தை கடந்தனர்.

அதன்பின், வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த வனத்தில் நள்ளிரவில் 3 கிமீ தூரம் சுமதியை தூக்கி வந்தனர். பிரதான சாலை வந்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள அட்டபாடி கோட்டத்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுமதிக்கு நேற்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.



Tags : Madupalaya , Near Mettupalayam, people carried a pregnant woman for 3 km in a cradle
× RELATED தண்டவாளத்தில் மண்சரிந்து பாறை...