காந்திநகர்: குஜராத் முதலமைச்சராக 2வது முறையாக பூபேந்திர படேல் பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோர் பங்கேற்றனர். காந்தி நகரில் புதிய தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ள ஹெலிபேட் மைதானத்தில் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பூபேந்திர படேலுக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பூபேந்திர பட்டேலை தொடர்ந்து ரிஷிகேஷ் பட்டேல் உள்ளிட்ட 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதில் 8 பேர் கேபினெட் அந்தஸ்து பெற்றவர்கள். பதவியேற்பு விழாவில் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களான ஆதித்யா நாத், பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 182 இடங்களில், இதுவரை இல்லாத வகையில் அந்த கட்சி 156 இடங்களில் வெற்றிபெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 7வது முறையாக அந்த மாநிலத்தை ஆளுகிற அதிகாரத்தை பாஜகவுக்கு மக்கள் வழங்கியுள்ளனர். விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.