இமாச்சல் பிரதேச தோல்வி எதிரொலி; அரியானா பாஜக முதல்வர் மாற்றம்?: சமூக ஊடகங்களின் கருத்தால் அலறல்

கர்னால்: இமாச்சல் தேர்தலில் பாஜக தோல்வியுற்ற நிலையில், அரியானாவில் அம்மாநில முதல்வரை மாற்றப் போவதாக சிலர் கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில், அதற்கு அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் எதிர்வினை ஆற்றியுள்ளார். அரியானா முதல்வராக மனோகர் லால் கட்டார் கடந்த 8 ஆண்டாக பதவி வகித்து வருகிறார். இமாச்சல் பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியை காங்கிரசிடம் பறிகொடுத்த நிலையில், தற்போது அரியானா மாநில முதல்வரை மாற்ற வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த சிலர் சமூக ஊடகங்கள் மூலம் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரியானா மாநிலம் கர்னாலாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பாஜக மூத்த தலைவரான அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசுகையில், ‘சமூக வலைதளங்களை சிலர் பொழுதுபோக்காக பயன்படுத்துகின்றனர். அரியானா முதல்வரை மாற்றப் போவதாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் பதிவிடுகின்றனர்.

பாஜகவின் முதல்வரோ, பிரதமரோ யாராக இருந்தாலும், அவர்கள் மக்கள் நலனுக்காக பாடுபடுவார்கள். இதுதான் எங்களது சித்தாந்தம். தனிநபர்களின் கருத்துக்காக எதுவும் மாறிவிடாது. குழுவாக வேலை செய்யும் நாம் (பாஜக நிர்வாகிகள்) குழுவாக முடிவுகளை எடுக்கிறோம். சமூக ஊடகங்கள் மூலம் முடிவுகளை எடுப்பதில்லை. இருப்பினும், இதுபோன்ற விஷயங்களை சிலர் வேடிக்கையாக பார்த்து வருகின்றனர்’ என்றார்.

Related Stories: