×

குஜராத்தில் 7வது முறையாக பாஜக ஆட்சி; 2வது முறையாக பூபேந்திர படேல் முதல்வராக பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு

காந்திநகர்: குஜராத்தில் 7வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இன்று 2வது முறையாக பூபேந்திர படேல் முதல்வராக பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக மொத்தமுள்ள 182 இடங்களில் இதுவரை இல்லாத வகையில், 156 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து 7வது முறையாக மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. கடந்த 1995ம் ஆண்டு ெதாடங்கிய பாஜகவின் வெற்றி தற்போது வரை தொடர்கிறது. அதேநேரம் இந்த தேர்தலில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 17 தொகுதியிலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 5 தொகுதியிலும், சுயேட்சைகள் மூன்று இடங்களிலும் ெவற்றி பெற்றன. தற்போது முதல்வராக இருக்கும் பூபேந்திர படேல் (60), நேற்று முன்தினம் நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மீண்டும் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தில் மேலிட பார்வையாளர்கள் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அர்ஜூன் முண்டா மற்றும் கர்நாடக  முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தலைமையில் மாநில ஆளுநர் ஆச்சாரிய தேவ்ரதை பூபேந்திர படேல் சந்தித்தார். புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்த கடிதத்தை ஆளுநரிடம் பூபேந்திர படேல் வழங்கினார். புதிய அரசு அமைப்பதற்கும் உரிமை கோரினார். அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இன்று மதியம் 2 மணிக்கு மேல் குஜராத்தின் 18வது முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்கிறார். காந்திநகரில் உள்ள புதிய தலைமைச்செயலகம் அருகே அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்தில் பதவியேற்பு விழா நடக்கிறது. அப்போது பூபேந்திர படேலுக்கு ஆளுநர் ஆச்சாரிய தேவ்ரத் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். பூபேந்திர படேல், தொடர்ந்து 2வது முறையாக குஜராத் மாநில முதல்வராக பதவியேற்கிறார்.

பூபேந்திர படேலுடன் 20 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இவர்களில் கடந்த ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த 8 பேருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான இலாகா விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய பதவியேற்பு விழாவில் குஜராத் மண்ணின் மைந்தனான பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதால், அவரை நேற்றிரவு அகமதாபாத் தெருக்களில் மக்கள் குவிந்து உற்சாகமாக வரவேற்றனர். அதனால் விழா நடக்கும் பகுதிகள் மற்றும் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags : gujarat ,bhupendra padel ,modi , BJP rule in Gujarat for the 7th time; Bhupendra Patel sworn in as CM for 2nd term: Heavy security as PM Modi attends
× RELATED அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும்...