திருப்பூரில் ஆய்வு விளக்க கூட்டம் பெண்கள் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு அவசியம் -சார்பு நீதிபதி அறிவுறுத்தல்

திருப்பூர் : பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஏற்பட்டால், அதை யாரிடம் புகார் செய்வது என்னும் விழிப்புணர்வு தேவை என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான மேகலா மைதிலி அறிவுறுத்தினார். திருப்பூர் சேவ் அமைப்பு சார்பில், 2022ம் ஆண்டு நடந்த பாலின வன்முறை குறித்து ஆய்வு விளக்க கூட்டம் திருப்பூர் காங்கயம் ரோட்டில் தனியார் ஓட்டலில் நடந்தது. முன்னதாக சேவ் அமைப்பின் செயல் இயக்குனர் வியாகுல மேரி வரவேற்றார். நிர்வாக இயக்குனர் அலோசியஸ் தலைமை வகித்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான மேகலா மைதிலி பேசியதாவது: பெண்களுக்கு எதிரான பாலின வன்முறை பல்வேறு வகையிலும் நடந்து வருகிறது. வேலை பார்க்கும் இடம் மட்டுமின்றி, பொது இடங்களிலும் நடக்கிறது. நமது நாட்டில் மட்டும் இச்சம்பவம் நடப்பதில்லை. அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் நடக்கிறது. தமிழ்நாட்டில் பெண்கள் பல வகையிலும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இதை வெளியில் சொல்லாமல் அமைதியாக இருந்து விடுகின்றனர்.

இந்த ஆய்வை திருப்பூரில் நடத்த காரணம். தொழில் நகரமான திருப்பூருக்கு வேலை, வருமானத்தை தேடி வெளி மாவட்ட, மாநிலத்தினர் அதிக அளவில் வருகின்றனர். சொந்த ஊரில் இருக்கும்போது, ஒருவித பயம் இருக்கும். அதுவே வெளியூரில் இருக்கும்போது, கேட்க ஆள் இல்லை என்கிற நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் நடக்க வாய்ப்பாகிறது. நமக்கு எதிரான பாதிப்பு ஏற்பட்டால், அதை யாரிடம் புகார் செய்வது என்கிற விழிப்புணர்வு பெண்களுக்கு தேவை. இவ்வாறு, அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அம்பிகா பேசியதாவது:

பெண்களை பாதுகாக்க அரசு பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளது. முன்பெல்லாம், பெண்களுக்கு பொது இடங்களில் பேச வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருந்தது. அதேபோல, கல்வி கற்பதிலும் தடை இருந்தது. பெண்கள் அவர்களை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல, ஆண்களும் அவர்களுக்கு எதிரான போக்சோ,  வரதட்சணை உள்ளிட்ட சட்டங்கள் குறித்தும் தெரிந்து கொள்வது அவசியம்.

பெண்கள் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர்கள் மீது குற்றம் சுமத்தக்கூடாது. பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்களுக்கு எதிரான சட்டங்கள் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக போக்சோ சட்டம் குறித்து தெரிவதில்லை. இதன் காரணமாகவே, திருமண வயதை எட்டாத சிறுமிகளை திருமணம் செய்து, ஆண்கள் சிறைக்கு செல்கின்றனர். வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது சாத்தியம் அல்ல. சமூக அக்கறை இருபாலருக்கும் இருக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் தன்னார்வ அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: