×

சங்கரன்கோவில் சுவாமி சன்னதி நுழைவுவாயில் பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்-விரைவில் அகற்றப்படுமா?

சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் சுவாமி சன்னதி முன்பாக நுழைவுவாயில் பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதால் தடுப்பை அகற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் வியாபாரிகளும், பக்தர்களும் உள்ளனர்.  தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதே நேரத்தில் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகின்றனர். அவ்வளவு சிறப்பு மிக்க இக்கோயிலின் சுவாமி சன்னதி பகுதியில் 50க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது.

இங்கு தான் திருமணத்திற்கு சீர்வரிசை பொருட்களான பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமி சன்னதியின் நுழைவுவாயில் அருகே காவல்துறையினரால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பக்தர்களும், வியாபாரிகளும் தடுப்புகளை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.

 இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி பணியில் இருந்த டிஎஸ்பி பாலசுந்தரம், கோயில் துணை ஆணையர் செல்லத்துரை, இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி முன்னிலையில்  வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள், மண்டகப்படிதாரர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பண்டிகை காலங்களில் மட்டுமே இந்த தடுப்புகளை அடைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது போலீசார் மீண்டும் தடுப்பை அடைத்து வாகனங்கள் செல்லக்கூடாது என தெரிவித்தனர்.

 இவ்வாறு அமைக்கப்பட்ட தடுப்பால் சுவாமி சன்னதி முன்பகுதியில் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மெயின்ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சங்கரன்கோவிலில்பஸ்நிலைய விரிவாக்க பணி தற்போது நடைபெறுவதால் பயணிகள் இப்பகுதியில் நின்றுதான் பல்வேறு இடங்களுக்கு காத்திருந்து பஸ்களில் ஏறுகின்றனர். சுவாமி சன்னதி முன்பாக நுழைவுவாயில் பகுதியில் தடுப்பு அடைக்கப்பட்டதால், இருசக்கர வாகனங்கள் நூற்றுக்கணக்கில் நிறுத்தப்படுவதால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தடுப்பு அகற்றப்படுமா?  என்ற எதிர்பார்ப்புடன் வியாபாரிகளும், பக்தர்களும் உள்ளனர்.

Tags : Sankarankoil Swami shrine , Sankarankoil: There is heavy traffic due to the barricade in front of Sankarankoil Swami shrine.
× RELATED தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்